கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரிநீரை பகிர்ந்து கொள்ளும் விதமாக நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 4 மாநிலங்களும் மேற்கண்ட இரு அமைப்புகளுக்கான தங்களது தரப்பின் பிரதிநிதி உறுப்பினர்களை நியமித்து உள்ளன. அதன் அடிப்படையில் இதுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நான்கு முறை கூடி நடந்துள்ளது. கடந்த மாதம் 25-ம் தேதி நடந்த கூட்டத்தில் 9.19 டி.எம்.சி. நீரை உடனே கர்நாடகம் விடுவிக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் விடுவிக்கப்படாததால் பாசனத்துக்காக ஜுன் 12-ல் நீர் திறக்க முடியவில்லை. ஜுலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரையும் கர்நாடகம் விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. ஜூன் மாத பங்கீடு 9.19 டிஎம்சி, ஜூலை மாத பங்கீடு 31.24 டிஎம்சி தண்ணீரை கால தாமதம் செய்யாமல் உரிய காலத்தில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் கடந்த ஜூன் 25ம் தேதி கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டார். ஆனால் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி திடீரென தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், எவ்வளவு தண்ணீர் திறக்கப்படும் என்பது பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 855 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக பருவமழை தீவிரமாக பெய்துவரும் சூழலில் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. விநாடிக்கு கபினி அணையில் இருந்து 500 கனஅடி, கேஆர்எஸ் அணையிலிருந்து 355 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: