×

அசாம் மாநிலத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழப்பு: 32 மாவட்டங்கள் பாதிப்பு

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாநிலங்களில் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையால் பீகார், அசாம், திரிபுரா, மேற்குவங்கம் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் சுமார் 52 லட்சம் பேர் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடு உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

காசிரங்கா தேசிய பூங்காவின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில் ஏரளமான வனவிலங்குகள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் புகழ்ப்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவின் 90 சதவீத பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின. இதை தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 வன விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏராளமான சாலைகள், பாலங்கள், கரைகள் உடைந்து சேதம் அடைந்துள்ளன.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ள பிரதமர் மோடி உடனடியாக அசாம் அரசுக்கு 251 கோடியே 55 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். அசாம் முதலமைச்சர் சரபானந்தா சோனோவாலிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதனிடையே பீகாரிலும் வெள்ளச்சேதம் கடுமையாக உள்ளது. 12 மாவட்டங்களில் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. நதிகள் கரை புரண்டு ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Assam, heavy rains, floods,
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...