×

கலெக்டர் அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை பெண்கள் உள்பட 5 பேர் கைது

பாரிமுனை: சென்னை பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே 2வது கடற்கரை சாலையில் கஞ்சா, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து 4 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.  சென்னை பாரிமுனை பகுதியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சிறு மற்றும் மொத்த விலைக்கடைகள் உள்ளன. இங்கு பொருட்கள் வாங்கி பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று வியாபாரிகள், தொழில் செய்கின்றனர். இதனால், இப்பகுதியில் எப்போதும் பரபரப்பான சூழல் காணப்படும்.

குறிப்பாக மண்ணடி மூர் தெரு பகுதியில் ஏராமான கடைகள், இரும்பு குடோன்கள் உள்ளன. கட்டிடம் கட்டுவது, தொழிற்சாலைகளுக்கு தேவையான இரும்பு பொருட்களை வாங்குவதற்கு தினமும் இங்கு ஏராளமானோர் வருகின்றனர்.
அதே நேரத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்துக்கு அடிமையாகி இப்பகுதியில் வலம் வருகின்றனர். இவர்களை குறிவைத்து மதுபானம், கஞ்சா, மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. தள்ளுவண்டிகளிலும், குடிசை வீடுகளில் மறைத்தும் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதில், பெரும்பாலும் பெண்களே ஈடுபடுவதாக அப்பகுதி வியாபாரிகள் கூறுகின்றனர். இதுபற்றிய செய்தி நேற்றைய தினகரன் நாளிதழில் வெளியானது.

தினகரன் செய்தி எதிரொலியாக பூக்கடை துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், வடக்கு கடற்கரை போலீசார் இந்த பகுதிகளில் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். அங்குள்ள குடிசை பகுதியில் வசிக்கும் முனியம்மாள் (42) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது மதுபாட்டில்கள், கஞ்சா, மாவா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து முனியம்மாளை கைது செய்தனர்.இதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ஜோதி (28), சுமித்ரா (24), திலகா (38), சிலம்பரசன் (22) ஆகியோரது வீடுகளிலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் டாஸ்மாக் கடை மூடுவதற்கு முன்னதாக 5 பேரும் ஏராளமான மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அதிகாலை முதல் டாஸ்மாக் கடை திறக்கும் வரையும் விடிய விடிய கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரையும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Collector's office, cannabis sale, women, 5 arrested
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...