×

வங்கிகளில் 2019ம் ஆண்டில் 9.34 லட்சம் கோடியாக வராக்கடன் குறைந்துள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: கடந்த 2019ம் நிதியாண்டில் வங்கிகளின் வராக்கடன் 9.34 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:  வங்கிகளில் 2018-19ம் நிதியாண்டில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ரிசர்வ் வங்கிக்கு  374 புகார்கள் வந்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் 338 புகார்கள் கோடாக் மகேந்திரா வங்கியிடம் இருந்தும், எச்டிஎப்சி வங்கியிடம் இருந்து 273 , ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து 273, ஆக்சிஸ் வங்கியிடம் இருந்து 195, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியிடம் இருந்து 190 புகார்களும் வந்துள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ரூ.10,36,187 கோடியாக இருந்த வங்கிகளின் வராக்கடன், கடந்த மார்ச் 31ம் தேதி ₹9,33,625 கோடியாக குறைந்துள்ளது. மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக இந்த அளவு குறைந்துள்ளது. கடன் பெற்றவர்களின் அசையா சொத்துகளை பறிமுதல் செய்ததன் மூலம் கிடைக்கப் பெற்ற தொகை மற்றும் பாதிக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீடு, பொதுத்துறை வங்கிகளின் சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்த வராக்கடன் அளவு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : Finance Minister Nirmala Sitharaman
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...