கே. கல்யாணசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட 4 பேருக்கு அகாடமி ரத்னா விருது

புதுடெல்லி: பரத நாட்டிய கலைஞர் கே.கல்யாண சுந்தரம் பிள்ளை உட்பட 4 பேர், `அகாடமி ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சங்கீத நாடக அகாடமி அமைப்பு, இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அமைப்பாகும். இதன் பொதுக்குழு கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்றது. இதில், பரத நாட்டிய கலைஞர் கே. கல்யாண சுந்தரம் பிள்ளை, தபேலா கலைஞர் ஜாகீர் உசேன், நடனக் கலைஞர் சோனல் மான்சிங் மற்றும் நடன பயிற்சியாளர் ஜதின் கோஸ்வாமி ஆகியோர் ‘அகாடமி ரத்னா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தவிர இசை, நடனம், நாடகம், பாரம்பரிய இசை, நாட்டுப்புற இசை, பழங்குடி இசை, பொம்மலாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் ஒட்டுமொத்த பங்களிப்புக்கான 2018-ம் ஆண்டு `அகாடமி புரஸ்கார் விருதுக்காக 44 கலைஞர்களும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இது தவிர உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது பெறும் 32 இளம் கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இசைப்பிரிவில் கர்நாடக வாய்ப்பாட்டு பிரிவில் அலமேலு மணி, மல்லாடி சூரி பாபு ஆகியோரும், இசைக் கருவிகள் கூட்டுப் பிரிவில் நாதஸ்வர கலைஞர்கள் எஸ்.காசிம் மற்றும் எஸ்.பாபு, வயலின் கலைஞர்கள் கணேஷ் மற்றும் குமரேஷ் ஆகியவர்களும், நடன கூட்டுப் பிரிவில் கதகளி கலைஞர்கள் இஷ்கிரா மற்றும் மவுலிக் ஷா ஆகியோரும், நடனப் பிரிவில் பரத நாட்டிய கலைஞர் ராதா தர், குச்சிபுடி கலைஞர் பசுமூர்த்தி ராமலிங்க சாஸ்திரி, மோகினியாட்ட கலைஞர் கோபிகா வர்மா உள்ளிட்டோரும் விருது பெற தேர்வாகி உள்ளனர்.

Related Stories: