×

சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது ரயில் பயணிகளின் கழிவுகள் விழுவதை தடுக்க கோரி வழக்கு

சென்னை: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது சுரங்கப்பாதையின் மீது செல்லும் ரயில்களின் கழிவுகள் விழுவதை தடுக்க நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:  சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக தொழில் செய்து வருகிறேன். தினமும் திருவல்லிக்கேணியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக நீதிமன்றத்துக்கு வருகிறேன். இந்த சாலை வடசென்னைக்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த சாலையில் கலெக்டர் அலுவலகம், அரசு அலுவலகங்கள், சுங்கத்துறை அலுவலகம், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என ஏராளமான அலுவலகங்கள் உள்ளன.

இந்த அலுவலங்களுக்கு செல்வோர், ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதையைக் கடந்து செல்ல வேண்டும். சுரங்கப்பாதையின் மேல் ரயில் பாதை உள்ளது. இந்த பாதையில் அடிக்கடி ரயில்கள் செல்லும். சுரங்கப்பாதையை கடக்கும்போது ரயில்களின் கழிவறைகளில் உள்ள கழிவுகள் மற்றும் கழிவுநீர் கீழே கொட்டுகின்றன. இவை வாகன ஓட்டிகளின் மேல் விழுகிறது.  இதிலிருந்து தங்களை பாதுகாக்க ரயில் வரும்போது சுரங்கப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் ரயில் செல்லும்வரை வாகனங்களை நிறுத்திவிட்டு பின்னர் செல்கிறார்கள். இதனால், பல நேரங்களில் வாகன நெரிசலும், தேவையில்லாத சிக்கல்களும் ஏற்படுகின்றன.

கழிவுகள் வாகன ஓட்டிகள் மீது படுவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே, சுரங்கப்பாதையின் மேல் உள்ள ரயில் பாதையிலிருந்து கழிவுகள் கொட்டாமல் இருக்கும் வகையில் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் எனக்கோரி தெற்கு ரயில்வேக்கு கடந்த ஏப்ரல் 16ம் தேதி கடிதம் எழுதினேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரணையை வரும் வெள்ளிக் கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Reserve Bank of Chennai்,Railway Traffic Masters
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்