×

மாஞ்சோலை மலைச்சாலை தொடர்பாக திருநெல்வேலி கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: நெல்லை மாவட்டம்,  மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து என தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. இந்த தேயிலை தோட்டங்களை நம்பி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மலைபகுதியில் வசித்து வந்தாலும், பள்ளி, கல்லூரி மற்றும் அன்றாட தேவைகளுக்காக நெல்லைக்கு தான் வரவேண்டும். இதனால், இந்த பகுதிகளுக்கு தினமும் 3 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில், பேருந்துகள் இயங்கி வந்த 8 கி.மீ மலைசாலைகள் சரியில்லாததால், அதனை சீரமைக்க வனத்துறை முடிவு செய்தது. அதன்படி சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதால், பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை அமைப்பது குறித்தும், பஸ் இயக்குவது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டபோது, யாரும் எந்தவித சரியான பதிலும் அளிக்காமல் உள்ளனர்.

எனவே சாலை பணியை விரைவில் முடிக்க வழி செய்யுமாறு, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜான்சன் அப்பாதுரை, மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயசந்திரன், இது தொடர்பாக வனத்துறை முதன்மை, தலைமை கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர், களக்காடு-முண்டங்காடு புலிகள் காப்பகம் துணை இயக்குனர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.



Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...