ஆந்திராவில் கோயில் வாசலில் பயங்கரம் பூசாரி உட்பட 3 பேர் கழுத்தறுத்து படுகொலை

* சிவலிங்கத்துக்கு ரத்தத்தால் அபிஷேகம்
* புதையல் எடுக்க நரபலியா என விசாரணை

திருமலை: ஆந்திராவில் கோயில் வாசலில் பூசாரி உட்பட 3 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். மேலும் சிவலிங்கத்துக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவின் கதிரி அடுத்த கோரிகோட்டா கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு அர்ச்சகராக ஓய்வுபெற்ற ஆசிரியரான சிவராம்ரெட்டி(70) பூஜைகளை செய்து வந்தார். இவருக்கு அவரது அக்கா கமலம்மா(75) உதவியாக இருந்து வந்தார். சிவராம்ரெட்டி சிவன் கோயிலை புதுப்பிக்க முடிவு செய்து கடந்த சில மாதங்களாக கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இதில் மூலவர் சன்னதி அமைந்துள்ள பகுதியில் சுவர்கள் எழுப்பப்பட்டு கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சிலரும் சிவராம்ரெட்டிக்கு உதவி செய்து வந்தனர்.

மேலும் பெங்களூரில் வசித்து வந்த சிவராம்ரெட்டியின் உறவினரான சத்தியலட்சுமியும்(68) இப்பணியில் ஈடுபடுவதற்காக கடந்த சில நாட்களாக கோரிகோட்டாவிலேயே தங்கி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கோயில் வழியாக சென்ற பொதுமக்கள் அர்ச்சகர் சிவராம் ரெட்டி, அவரது அக்கா கமலம்மா, உறவினர் சத்தியலட்சுமி ஆகிய 3 பேரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் கோயில் முழுவதிலும் சிவலிங்கத்திற்கும் ரத்தத்தால் அபிஷேகம் செய்து, புற்று மீதும் ரத்தத்தை தெளித்தது தெரியவந்தது. இதைக்கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் அறிந்த கிராமமக்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த அனந்தபுரம் எஸ்பி சத்தியயேசுபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.
இதில் கடந்த சில ஆண்டுகளாக சிவன் கோயிலில் புதையல் இருப்பதாக ஒரு தகவல் பரவி இருந்தது. பெங்களூரில் வசித்து வரும் சத்தியலட்சுமி மூலம் சிவன் கோயிலில் புதையல் இருப்பதாக வந்த தகவலை தெரிந்தகொண்ட பெங்களூரை சேர்ந்த சிலர் இங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிவராம்ரெட்டி, கமலம்மா, சத்தியலட்சுமி ஆகிய 3 பேரையும் முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார்களா? என்பதும் தெரியவில்லை.

3 பேரையும் கொலை செய்து ரத்தத்தை சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ததால் புதையல் எடுக்க நரபலிக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Andhra, temple gate, priest, neck-slaughter
× RELATED திருச்செந்தூர் கோவில் ராஜ கோபுர...