அதிமுக ஆட்சியில் வாங்கியது 9 ஆயிரம் பஸ்கள் திமுக ஆட்சியில் 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டது: சட்டசபையில் திமுக-அமைச்சர் நேருக்கு நேர் வாக்குவாதம்

சென்னை: திமுக ஆட்சியில் 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டது என்று திமுக உறுப்பினர் பேரவையில் பேசினார். அப்போது அமைச்சருக்கும் திமுக உறுப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.சட்டசபையில் போக்குவரத்துத்துறை மானியகோரிக்கையில் நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன்(திமுக) பேசியதாவது: பொதுத்துறையில் மிகவும் முக்கியமானது போக்குவரத்துத்துறை. இந்த துறையின் கீழ் 21,352 பஸ்கள் இயக்கப்படுகிறது. 1,32,292 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இயக்கப்படும் பேருந்துகள் மூலம் 1 லட்சத்து 74 ஆயிரம் பயணிகள் தினம்தோறும் பயணிக்கின்றனர். இப்போது போக்குவரத்துத் தொழிலாளர் 85.23 கி.மீட்டர் மட்டுமே பஸ் இயக்குகின்றனர். இது கடந்த காலங்களில் 87.59 ஆக இருந்தது. பஸ் இயக்கும் நேரத்தை குறைத்ததால் கடந்த 2019-20ம் ஆண்டில் பல்வேறு தடங்களில் 2 லட்சத்து 36 ஆயிரம் இயக்க தூரம் குறைந்துள்ளது.  இதன்மூலம் அரசுக்கு ₹3 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான மானியத்தை அரசு தரவேண்டும். அதேநேரத்தில் மற்ற துறைகளான ஊரக வளர்ச்சி துறைக்கு ₹18 ஆயிரம் கோடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ₹12 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், போக்குவரத்து துறைக்கு ₹1,200 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ விடுப்பு, ஈட்டு பணி, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து பயன்களும் மறுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வர வேண்டிய பென்சன் தொகையும் வழங்கப்படவில்லை. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: அரசு ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 21,542 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் பயணம் செய்வது குறைந்ததால் வழித்தட சீரமைப்பு குழு அமைக்கப்பட்டது. அதில் குறைவான பயணிகள் செல்லும் வழித்தடத்தில் 1,412 பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எரிபொருள் மிச்சமாகியுள்ளது. திமுக எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன்: கடந்த 2006, 2011 திமுக ஆட்சி காலத்தில் 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் 9 ஆயிரம் பஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பஸ்கள் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், பேருந்து சேவைகளை குறைத்துள்ளனர். சில இடங்களில் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: போக்குவரத்து துறைக்கு கடந்த 2006,2011 திமுக ஆட்சிகாலத்தில் 3,685 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் கடந்த 8 ஆண்டில் 15,610 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 8 ஆண்டில் 4,570 கோடி பென்சன் தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டில் 11,862 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. சென்ற நிதிநிலை அறிக்கையில் 3 ஆயிரம் பேருந்துகள் வாங்க போவதாக அறிவிக்கப்பட்டது. அதில், 1,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் மீதியுள்ள பேருந்துகள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

திமுக எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன்: சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்போவதாக குறிப்பிடப்பட்டது. ஆனால், புதிய மின்சார பேருந்துகள் இப்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: ஜெர்மன் நிதி உதவியின் கீழ் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. அதில், முதல்கட்டமாக 100 பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் கோவையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும் இயக்கப்பட உள்ளது. அசோக் லய்லேண்ட் நிறுவனம் சார்பில் 2 பேருந்துகள் சென்னையில் இயக்க ஒப்புகொண்டுள்ளது. மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைப்பது தொடர்பான ஆய்வு பணி நடந்துவருகிறது. 2019-20ம் ஆண்டில் பல்வேறு தடங்களில் 2 லட்சத்து 36 ஆயிரம் இயக்க தூரம் குறைந்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ₹3 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: