சென்னை மாநகராட்சியில் குப்பை இல்லாத முதல் மண்டலம் மணலி: ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியின் முதல்  குப்பையில்லா மண்டலமாக மணலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : மணலி மண்டலத்தில் நாள்தோறும் 40 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தது.  2015ம் ஆண்டுக்கு முன்பு மணலி மண்டலத்தில் 251 காம்பேக்டர் குப்பைத் தொட்டிகள் மூலமாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு அருகில் உள்ள காலி இடத்தில் கொட்டப்பட்டு வந்தது.  இதனைத் தொடர்ந்து குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு முதல் முயற்சியாக 20 குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக 2019ம் ஆண்டு மே மாதம் இறுதியில் அனைத்து குப்பைத் தொட்டிகளும் அகற்றப்பட்டு, மணலி மண்டலம் குப்பையில்லா மண்டலமாக முதல் முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள உரங்கள் பொதுமக்கள் கூடுமிடங்களில் விற்பனை செய்யப்பட்டு, அதில் ஈட்டப்படும் தொகை பெருநகர சென்னை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டு வருகிறது.

மணலி மண்டலம் குப்பையில்லா மண்டலமாக மாற்றப்பட்டதனால் 251 எண்ணிக்கையுள்ள குப்பைத் தொட்டிகள், 3 இலகுரக காம்பெக்டர் லாரிகள் மற்றும் 2 கனரக லாரிகள் தினசரி குப்பை அகற்றும் பணியிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டு, இவ்வாகனங்களுக்கான எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளது.  இதனால் சென்னை மாநகராட்சிக்கு ஒரு மாதத்திற்கு சுமார் ₹8 லட்சம் வரை செலவு குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக சுற்றுச்சூழல் பாதிப்பின்றி, சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் உரமாகவும், மறுசுழற்சியும் செய்யப்படுகிறது.  மேலும், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டதுடன், குப்பைகளால் ஏற்படும் துர்நாற்றம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.  எனவே, சென்னை மாநகராட்சியில் மணலி மண்டலம் முதல் குப்பையில்லா மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: