ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சரவணபவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை  உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து ஜூலை 9ம் தேதி தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்சில் வந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்  சரணடைந்தார்.சிறைத்துறை கண்காணிப்பில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தண்டனைக் கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ராஜகோபாலின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையை தொடர அனுமதிக்க உத்தரவிடக்கோரி அவரது மகன் சரவணன் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் தாக்கல் செய்த அறிக்கையில், சரணடைந்தவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு மருத்துவ குழுவினர் போதுமான சிகிச்சை வழங்கி வருவதாகவும், இரு முறை நெஞ்சுவலியால் பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செயற்கை சுவாசம் பொருத்தபட்டு கவலைகிடமாக உள்ளதால், வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது சிக்கலானது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு வக்கீல் நீதிபதியிடம், அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ஒரு நாள் கூட ராஜகோபால் சிறை செல்லவில்லை. இதே காரணத்தை கூறி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்று வாதிட்டார்.அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ராஜகோபாலின் உடல்நிலையில் சிக்கல் ஏற்பட்டால் தானே பொறுப்பேற்று கொள்வதாக மனுதாரர் உத்தரவாதம் தந்துள்ளார். எனவே, வடபழனி விஜயா மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சையை தொடர அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ராஜகோபாலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர். மேலும், அவருக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை சிறை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும். இந்த வழக்கு 3 வாரத்திற்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: