தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள மாசுவிற்கு ஸ்டெர்லைட்டை பொறுப்பாக்க முடியாது

* அனல் மின்நிலையங்கள் மீதுதான் நடவடிக்கை தேவை

* வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வாதம்

சென்னை: தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள எல்லா மாசுவிற்கும் ஸ்டெர்லைட் ஆலையை பொறுப்பாக முடியாது என்று வேதாந்த நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்தன. கடந்த 2018 மே மாதம் நடந்த மிகப்பெரிய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலை சார்பில் மூத்த வக்கீல் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார்.

அவர் வாதிடும்போது, ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதியில் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டதாக கூறுவதற்கான எந்த ஆதாரங்களையும் அரசு இதுவரை கொடுக்கவில்லை. தூத்துக்குடி பகுதியிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் கடல்மட்டத்தின் அளவிலே இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையால் தான் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுவதையும் ஏற்க முடியாது.கடல் மட்டத்தில் இருக்கும் கிராமங்களில் நிலத்தடி நீரில் உப்பு நீர் புகுந்து விடுவதால் கிராமங்களின்  நிலத்தடி நீர்  மாசடைகிறது. கடந்த 1989, 1994 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், புவியியல் துறை  நடத்திய ஆய்வு ஆகியவை இதை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, நீர் மாசுவுக்கு  ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம் என்று எப்படி கருத முடியும். தூத்துகுடியில் அதிக மாசு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையங்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் தான் மாசு அடைவதாக கூறுவது ஏற்க முடியாது என்று வாதிட்டார்.விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

Related Stories: