தமிழகத்தில் கடந்த ஆண்டு எம்ப்ளாய்மென்ட் ஆபிஸ் மூலம் 3,948 பேருக்கு மட்டுமே வேலை

* காத்திருப்பவர்கள் 27 லட்சம்

* பணிக்கு பதிவு செய்து காத்திருப்போர் அதிர்ச்சி

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் கடந்த ஓர் ஆண்டில் 3,948 பேர் மட்டும் பொதுத்துறையில் பணி பெற்றுள்ளனர். ஆனால் 24 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு துறையின் கீழ் 34 மாவட்டங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் செயல்பட்டுவருகிறது. இந்த வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் கல்வி தகுதிகளை இணையதளம் மூலம் பதிவு செய்தல், வேலையளிப்பவர்களுக்கு மனுதார்களை பரிந்துரைத்தல் செய்தல், இளைஞர்களுக்கு தேவையான தொழில் நெறி வழிகாட்டுதல் வழங்குதல், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்குதல், தன்னார்வ பயிலும் வட்டங்களை உருவாக்குதல், அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்தல், திறன் பயிற்சிக்கு பதிவு செய்தல் மற்றும் வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் மனுதாரர்களுக்கு பதிவுமூப்பு அடிப்படையில் பொதுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிவழங்கும் பணியையும் வேலைவாய்ப்பு துறை செய்துவருகிறது.

அதன்படி கடந்த 2011 ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 89 ஆயிரத்து 755 பேர் பொதுத் துறையில் பணிநியமனம் பெற்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2018 ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த மார்ச் மாதம் வரை 3 ஆயிரத்து 948 பேர் மட்டுமே பொதுத்துறையில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.இதைப்போன்று தனியார் துறை வேலைவாய்ப்புகளை அதிகரிக்க ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் “வேலை வாய்ப்பு வெள்ளி” என்ற பெயரில் சிறிய மற்றும் பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019ம் ஆண்டு மார்ச் வரை 85 ஆயிரத்து 756 பேர் தனியார் துறையில் பனி நியமனம் பெற்றுள்ளனர் என்று வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 24 முதல் 58 வயதுக்குட்பட்ட 27 லட்சத்து 41 ஆயிரத்து 521 வேலைதேடுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் 170 பேர்

ஜனவரி 2018 முதல் மார்ச் 2019 வரை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 170 மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பொதுத் துறை மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த காலகட்டத்தில் 1456 மாற்றுத்திறனாளிகள் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் 1 லட்சத்து 29 ஆயிரத்து 818 மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்து கொண்டு உள்ளனர்.

18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள்      17,41,402

18 வயது முதல் 23 வரை                                     16,93,351

24 வயது முதல் 35 வரை                                     27,41,521

35 வயது முதல் 58 வரை                                     11,29,429

58 வயதுக்கு மேற்பட்டவர்கள்                                6,687

மொத்தம்                                                                  73,12,390

Related Stories: