ஊழலால் சீர்குலையும் குடிமராமத்து பணிகள்: வைகோ குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் ஊழல் முறைகேடுகளால் குடிமராமத்து திட்டங்கள் சீர்குலைந்துள்ளதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை தூர் வாருவதற்காக குடிமராமத்து திட்டங்கள் துவக்கப்பட்டபோது, விவசாயிகள் அதை வரவேற்றனர். நடப்பாண்டில் 29 மாவட்டங்களில் உள்ள 1,829 நீர்நிலைகளை 4 மண்டலங்களாக பிரித்து, குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்க ₹499.68 கோடி ஒதுக்கீடு செய்து, கடந்த ஜூன் 14ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இந்த குடிமராமத்து பணிகள் நீர்வள துறையினரால் திட்டமிடப்பட்டு விவசாய சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் சங்கங்கள் மூலமாக செயல்படுத்த வழிகாட்டு நெறிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

இதுதொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து, சங்கங்களை ஏற்படுத்தி குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான விதிமுறைகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக வகுக்கப்பட்டு, முறையாக பணிகள் நடைபெற வேண்டும் எனவும் அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.குடிமராமத்துப் பணிகள், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975, அதன் விதிகளின்படி அசல் ஆயக்கட்டுத்தாரர்களால்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சட்டமன்றத்திலும் நேற்று இதுகுறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், வழிகாட்டுதல் நெறிமுறைகளை தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு உள்ளூர் விவசாயிகள், ஆயக்கட்டுதாரர்கள் இல்லாமல், ஆளும் கட்சியினர் தலையீட்டில் பல போலி சங்ககள் உருவாக்கப்பட்டு, குடிமராமத்து திட்டப் பணிகள் என்ற பெயரில் நீர்நிலைகளை தூர்வாராமல் மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இதனால் குடிமராமத்து திட்டத்தின் நோக்கம் சிதைகிறது. எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்துத்திட்ட முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: