நிலுவைத்தொகையை பெற்றுத்தரக்கோரி 500க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

* குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது

* பணம் வராவிட்டால் மீண்டும் போராட்டம்

சென்னை: நிலுவைத்தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி ேபாலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், பொதுச்செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது தங்களுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வங்கிகளிடமிருந்து பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார்-விவசாயிகள் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் எழும்பூரில் உள்ள ஆர்.ஆர்.மைதானத்தில் வைக்கப்பட்டனர். மாலை 6 மணிக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலளர் ரவீந்திரன் கூறியதாவது:2018-19ல் அரைத்த கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த விலையில் எப்ஆர்பி  தனியார் சர்க்கரை ஆலைகள் ₹281 கோடியும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் ₹125 கோடியும் என ₹406 கோடி பாக்கி வைத்துள்ளனர். கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி 14 நாட்களுக்குள் மத்திய அரசு அறிவிக்கும் விலையை சர்க்கரை ஆலைகள் கொடுத்திட வேண்டும். ஆனால் ₹406 கோடி பாக்கி வைத்துள்ளனர். உரிய நேரத்தில் தராததால் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர் கடனுக்கு, வட்டி மற்றும் அபராத வட்டி கட்டுகின்றனர். புதிய கடன் வாங்க முடியவில்லை. குடும்ப செலவுகளுக்குக்கூட பணம் இன்றி விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

2013-14 முதல் 2016-17 வரை மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலை 24 தனியார் ஆலைகள் தரவில்லை. ₹1217 கோடி பாக்கி வைத்துள்ளனர். ஆருரான், அம்பிகா சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் பெயரில் ₹500 கோடிக்கு மேல் கடன் வாங்கியது.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவற்றின் முதலாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த கோரிக்கைகள் ஏற்று. பாக்கித்தொகையை வரும் 10ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என எங்கள் தரப்பில் கூறினோம். அவர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

Related Stories: