சில்லி பாயின்ட்...

* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர்கள்  மற்றும் உதவியாளர்களை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் 60 வயதுக்கு குறைந்தவர்களாகவும், ஐசிசி உறுப்பினர் நாட்டு அணிகளுக்கு குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சியாளராக பணிபுரிந்தவர்களாகவும், 30 டெஸ்ட் போட்டி அல்லது 50 ஒருநாள் போட்டியில் விளையாடியவர்களாகவும் இருக்க வேண்டும் என பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளது.

* ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர் விஜய்வீர் சித்து 3வது தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சக வீரர் ஆதர்ஷ் சிங்குடன் இணைந்து 25 மீட்டர் பிஸ்டல் குழு பிரிவில் நேற்று களமிறங்கிய விஜய்வீர் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த தொடரில் இந்திய அணி இதுவரை மொத்தம் 16 பதக்கங்களை அள்ளியுள்ளது.

* ஐசிசி உலக கோப்பை பைனலில் எந்த அணியும் தோற்கவில்லை. ஆனால் இங்கிலாந்து அணி சாம்பியனாக மகுடம் சூட்டிக்கொண்டது... அவ்வளவுதான். மற்றபடி இரு அணிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை’ என்று துரதிர்ஷ்டவசமாக 2வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

* இலங்கை அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ள வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பர் 1 ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மஷ்ராபி மோர்டசா கேப்டனாக நீடிக்கிறார்.

* ஜகார்தாவில் நடைபெறும் இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரேங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியைத் தழுவியது.

Related Stories: