×

பெண் எம்பிக்கள் மீது இனவெறி கருத்து அதிபர் டிரம்புக்கு எதிராக எதிர்கட்சியினர் கண்டன தீர்மானம்: அமெரிக்க அரசியலில் பரபரப்பு

வாஷிங்டன்: பெண் எம்பிக்களுக்கு எதிராக இனவெறி கருத்து கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கண்டித்து பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியினர் கண்டன தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக இருந்து வருகிறார். இதனால், பல்வேறு இனவெறி கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த 4 பெண் எம்பிக்களுக்கு எதிராக டிவிட்டரில் அவர் கூறிய கருத்து அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் தனது டிவிட்டரில், ‘‘அமெரிக்க அரசு எப்படி செயல்பட வேண்டுமென புத்திமதி கூறும் பெண் எம்பிக்களின் பூர்வீக நாடுகள் முழுவதும் பேரழிவை சந்தித்தவை. எனவே, அவர்களுக்குள்ள அறிவை பயன்படுத்தி, சொந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று அங்குள்ள குற்றங்களை களைய உதவி செய்யலாமே’’ என்றார்.

 ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 பெண் எம்பிக்களான கார்டெஸ், உமர், ரசிதா, அயானா ஆகியோர் சமீபகாலமாக டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருபவர்கள். இவர்களில் உமர் தவிர மற்ற 3 பேரும் அமெரிக்காவில் பிறந்தவர்கள். உமர் சோமாலியாவில் பிறந்து, சிறு வயதிலேயே அமெரிக்கா வந்தவர். 4 பேரின் பூர்வீகமும் வெவ்வேறு நாடுகள். இவர்களைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டு டிரம்ப் விமர்சித்து, இனவெறி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.  டிரம்ப்பின் கருத்துக்கு ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளனர். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. சபையின் சபாநாயகர் நான்சி, ‘‘ஆளும் குடியரசு கட்சி எம்பிக்களும், ஜனநாயகக் கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார். இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடக்க உள்ளது.

பிடிக்கலையா...?அப்ப போயிடுங்க!
சர்ச்சைக்கு பிறகும் அடங்காத டிரம்ப், ‘‘இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கலையா? இங்க நீங்க சந்தோஷமா இல்லையா? அப்ப சும்மா புகார் பண்ணிட்டு இருக்காதீங்க. கிளம்பி போயிடுங்க. அது உங்க விருப்பம். நீங்கதான் முடிவெடுக்கணும். இது அமெரிக்கா மீதான அன்பு பற்றிய விஷயம்’’ என மீண்டும் டிவீட் போட்டு, எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி இருக்கிறார்.



Tags : Female MPs, President Trump, Opposition, American Politics
× RELATED தேர்தல், கொரோனா விதிமீறல்: பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்பி மீது வழக்கு