மலேசியாவில் ஒரே நாளில் 5.50 கோடி செலவழித்த மாஜி பிரதமர்: நீதிமன்றத்தில் திடுக் தகவல்

கோலாலம்பூர்: நிதி மோசடி வழக்கில் கைதாகியுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், ஒரே நாளில் 5.50 கோடி செலவிட்டது தெரியவந்துளளது. மலேசியாவில் பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக். இவர் கடந்தாண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், மலேசிய மேம்பாட்டு ஆணைய நிதியை பல கோடி அளவுக்கு மோசடி செய்ததாக இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, நஜீப் கைது செய்யப்பட்டா. இவர்,  பிரதமராக இருந்தபோது அவரது மனைவியும் விதவிதமான நகைகள் அணிவதில் ஆர்வமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், நஜீப் மீதான நிதி மோசடி வழக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நஜீப்புக்கு கடன் அட்டை (கிரெடிட் கார்டு) வழங்கியிருந்த மலேசிய ஆம் பேங்க் அதிகாரி யேவ் எங்க் லியோங் நீதிமன்றத்தில் கூறியதாவது: முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு எங்கள் வங்கி சார்பில் 2 கடன் அட்டைகள் வழங்கி இருந்தோம். இதை பயன்படுத்தி அவர் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி இத்தாலியில் உள்ள சுவிஸ் நகைக்கடை ஒன்றில் ஒரே நாளில் 5.50 கோடிக்கு நகைகளை வாங்கியுள்ளார். இது தவிர ஹவாய் அழகு சாதன கடைக்கு 77 லட்சம் செலுத்தியுள்ளார். பாங்காக் ஓட்டலில் 20 லட்சம் செலுத்தியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். `பிறநாட்டுடன் நல்லுறவை வளர்க்க, அந்த நாட்டு தலைவர்களுக்கு பரிசு வழங்குவது மலேசிய பிரதமரின் வாடிக்கை’ என்றும் அந்த அதிகாரி தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதை  நஜீப் மறுத்துள்ளார்.

Related Stories: