போக்குவரத்து நெரிசலால் பள்ளி, பணிக்கு செல்பவர்கள் கடும் அவதி யானை கவுனி மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: சட்டப்பேரவையில் துறைமுகம் எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறைமுகம் பி.கே.சேகர்பாபு(திமுக) துணை கேள்வி எழுப்பி பேசியதாவது: வால்டாக்ஸ் சாலை, ராஜா முத்தையா சாலை போன்ற சாலைகளை இணைக்கின்ற நயினார் மேம்பாலம் என்று அழைக்கப்படுகின்ற, யானை கவுனி மேம்பாலம் உள்ளது. இருப்பு பாதையின் கூடுதல் விரிவாக்க பணிகளுக்காகவும், பாலம் பழுதடைந்த காரணத்தாலும் 27.12.2016 அன்று மூடப்பட்டது. இது குறித்து 22.3.17, 19.7.17, 12.1.18 மற்றும் 14.2.19 ஆகிய ஆண்டுகளில் 4 முறை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். தற்போது இந்த பாலப்பணியை செய்வதற்கு ரூ.30 கோடி மாநராட்சி ஒதுக்கியுள்ளது. இந்த பாலத்தின் பணியை 50:50 சதவீதம் என்ற அளவில் மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து கட்டப்பட வேண்டிய பாலமாகும். 100 மீட்டர் அணுகு சாலையை முழுவதுமாக ரயில்வே துறைமூலம் கட்டப்பட வேண்டியது உள்ளது. என்னுடைய கேள்வி என்னவென்றால், இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இந்த பாலத்தை இடிக்கின்ற பணி இன்னும் துவக்கப்படவில்லை.

Advertising
Advertising

ஏனென்றால் மின் பகிர்மானத்தினுடைய உயர் மின்கம்பிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அவை மாற்றியமைக்கப்பட்டால் தான் அந்த பாலத்தை இடிக்கின்ற பணி துவங்கப்படும் என்று நான் கருதுகிறேன். ஆகவே இதில் மின்சார வாரியமும், உள்ளாட்சி துறையும், ரயில்வே துறையும் ஒருங்கிணைந்து ஒரு குழுவை அமைத்து, அந்த பகுதியில் உள்ள இந்த பாலத்தை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த பகுதி போக்குவரத்து நெரிசலால் மூச்சுக்கூட முடியாத அளவுக்கு, காலை நேரங்களில் பள்ளிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே, அரசு இந்த பாலம் கட்டுகின்ற பணியை துரிதப்படுத்தி, வேகப்படுத்தி, விரைவாக ஓரிரு ஆண்டுகளுக்கு உள்ளாவது முடிப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: வருகிற 23ம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளவாடங்களை மாற்றியமைத்த பின்னர் பழைய பாலத்தை இடிப்பதற்கான பணிகள் துவங்கப்படும். புதிய பாலத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள் தனியே கோரப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்வே துறையால் ரயில்வே பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டவுடன், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் துவங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: