இந்தாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியாவை விற்க திட்டம்: அரசு உறுதி

புதுடெல்லி: பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வமாக இருப்பவர்களை கண்டறிந்து ஆலோசனை நடத்தும் முடிவில் அரசு இருக்கிறது. இந்த வர்த்தக நடவடிக்கைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துவிடவும் திட்டமிட்டுள்ளது.இது குறித்து உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பதற்கு அடுத்த மாதம் கண்காட்சி நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வமாக இருப்பவர்களுடன் ஆக்கப்பூர்வமான வர்த்தக பரிவர்த்தனை பேச்சு நடத்தவும் முடிவு செய்துள்ளது. ஆனால், அரசு பங்குகளை மட்டும் விற்பதா அல்லது முழுவதுமாக விற்றுவிடுவதா என்பது பற்றி தெளிவுபடுத்தப்படவில்லை.அரசு தன்னுடைய பங்குகள் அனைத்தையும் விற்க முடிவு செய்துள்ளதாக விமானத் துறை உயர் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது. விற்பனை தொடர்பான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று ஏலத்தில் கலந்து கொள்ளும் தொழிலதிபர்கள் யோசனை கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு மேற்கொண்ட முயற்சியில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால், நஷ்டத்திலேயே இயக்கப்படுகிறது. இது அரசுக்கு பெரும் சுமையாக மாறிவிட்டது. எனவே எப்படியும் விற்றுவிடுவது என்பதில் முனைப்பாக உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் திட்டத்தில் அரசு மாற்றம் செய்துள்ளது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்று ₹1.05 லட்சம் கோடி நிதி திரட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நிதி உதவி செய்து முன்னேற்ற மத்திய அரசு முயன்றது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து ₹30,000 கோடியை வழங்கியது. ஆனாலும், ஏர் இந்தியா நிறுவனம் மற்ற நிறுவனங்களின் போட்டியை சமாளித்து முன்னேற முடியாமல் திண்டாடி வருகிறது. சுமார் ₹57,742 கோடி கடனில் மூழ்கியுள்ள இந்நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் ₹7,600 கோடி நஷ்டம் அடைந்தது. எனவே இந்த நிறுவனத்தை நடத்துவதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் எப்படியும் விற்றுவிடுவது என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துவிட்டது.

* ஏர் இந்தியா விமான நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்ததால் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு ₹30,000 கோடி நிதி உதவி செய்து தற்போது இயக்கி வருகிறது.

* ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் சுமை * 8.4 பில்லியன் டாலர் (₹57,742 கோடி) இந்நிலையில் கடந்த ஆண்டு ₹7,600 கோடி நஷ்டம் அடைந்தது.

Related Stories: