செயின் பறித்த பெண்களை 2 வாரத்துக்கு பின் மடக்கிய மாணவி: மீண்டும் கைவரிசை காட்ட வந்தபோது சிக்கினர்

கோவை: தன்னிடம் நகை திருடிய பெண்களை, மீண்டும் பஸ்சில் வந்தபோது பயணிகள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார் சட்டக்கல்லூரி மாணவி. கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகள் நிஷா (20). கோவை சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3ம் தேதி திருப்பூரில் இருந்து கோவை வந்த அரசு பஸ்சில் சின்னியம்பாளையத்தில் நிஷா ஏறினார். பஸ்சை விட்டு இறங்கிய போது அவர் அணிந்திருந்த இரண்டேகால் பவுன் ெசயினை காணவில்லை. இது குறித்து பீளமேடு போலீசில் நிஷா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை கோவைக்கு பஸ்சில் நிஷா வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் 2 பெண்கள் உட்கார்ந்திருந்தனர்.

நகை காணாமல் போன அன்றும் அதே பெண்கள்தான் அவர் அருகில் உட்கார்ந்திருந்தனர். இதனால் சந்தேகமடைந்த நிஷா அவர்களிடம் கேட்டபோது 2 பெண்களும் பஸ்சில் இருந்து இறங்கி ஓட முயற்சி செய்தனர். பின்னர் பயணிகளின் உதவியுடன் நிஷா அந்த 2 பெண்களையும் பிடித்து சின்னியம்பாளையம் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து ேபாலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த அலமேலு(45), அம்பிகா(27) என்பதும், அவர்கள்தான் நிஷாவிடம் நகையை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மீண்டும் பஸ்சில் சங்கிலி பறிக்க வந்தபோது அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் எத்தனை பேரிடம் இது போன்று கைவரிசை காட்டியுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

× RELATED வேலூரில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: ஆட்சியர் நேரில் ஆய்வு