கரூர் எஸ்பி மாற்றத்தை எதிர்த்த மனு தள்ளுபடி காவல்துறை சீர்திருத்த விதி பின்பற்றப்படுகிறதா?: டிஜிபி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: கரூர் எஸ்பி மாற்றத்தை திரும்ப பெறக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, காவல்துறை சீர்திருத்த விதி பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து டிஜிபி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம், வெங்கமேட்டைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன்,  ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கரூர் மாவட்ட எஸ்பியாக இருந்த விக்ரமன், திடீரென சென்னை கணினி பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த மாற்றம் கரூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் கடந்த மே 11ம் தேதிதான் அவர், கரூர் மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றார். அன்று முதல் மாவட்டத்தின்  முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொண்டார். சிறப்பாக பணியாற்றிய விக்ரமனை மாற்றி விட்டு, அந்த இடத்திற்கு சர்ச்சைகளுக்கு பெயர் போன பாண்டியராஜனை எஸ்பியாக நியமித்துள்ளனர். இவர் மீது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கியதுடன், மரியாதை குறைவாக நடந்து கொண்டது உள்ளிட்ட பல குற்றசாட்டுகள் உள்ளன. இவரை நியமித்ததற்கு கண்டனம் தெரிவித்து கரூர் மாவட்ட மக்கள், சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

எஸ்பி விக்ரமன், கரூர் மாவட்டத்தில் வெறும் 50 நாட்கள் மட்டுமே பணியாற்றியுள்ளார். ஆனால், கரூர் மாவட்டத்தில் பல்வேறு டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். பல ஆண்டுகளாக பணியாற்றுவோர் மாற்றப்படாத நிலையில், சிறப்பாக பணியாற்றிய எஸ்பி விக்ரமனை குறைவான நாட்களிலேயே மாற்றம் செய்துள்ளனர். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், பல்வேறு நீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது. எனவே,  நீதிமன்றம் தலையிட்டு எஸ்பி விக்ரமனின்  பணியிட மாறுதல் உத்தரவை, திரும்பப் பெறுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், இந்த மனுவை பொதுநல மனுவாக ஏற்க முடியாது என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. காவல்துறையினர் இடமாறுதல் தொடர்பான தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகள் பின்பற்றப்படுவது குறித்து, ஜூலை 30க்குள் டிஜிபி தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: