தாம்பரத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவம் 2 ரவுடிகள் கொலையில் 4 பேர் கைது

தாம்பரம்: தாம்பரத்தில் பட்டப்பகலில் இரண்டு ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தாம்பரம், கடப்பேரி அற்புதம் நகரை சேர்ந்தவர் பிரதீப்குமார் (எ) சின்ன அப்புனு (30). இவரது மனைவி நதியா. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (எ) புட்டி சுரேஷ் (29). புட்டி சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அற்புதம் நகர் பகுதியில் இருந்து கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதிக்கு மாறிச்சென்றார். பிரதீப்குமாரும், சுரேஷும் நண்பர்கள். இருவர் மீதும் அடிதடி, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளன. சுரேஷ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் குண்டாஸ் வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பிரதீப்குமாருக்கும் அற்புதம் நகர் மற்றும் கடப்பேரி பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதீப்குமார், அவரது அண்ணன் பெரிய அப்புனு (எ) பிரவீன் குமார், அவரது நண்பர்கள் மணிகண்டன் (எ) கோல்ட் மணி, புட்டி சுரேஷ் ஆகியோர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர்.

இந்நிலையில் கடப்பேரி அருகே உள்ள பர்மா காலனியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பிரதீப்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வந்தபோது பின்னால் வந்த லாரிக்கு வழி விடாமல் சென்றதால் கடப்பேரி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரங்கநாதன் அவர்களிடம், ‘‘வழிவிட்டு செல்லுங்கள்’’ என கூறியுள்ளார். இதனால் பிரதீப்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ரங்கநாதனிடம் தகராறு செய்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரங்கநாதனின் உறவினர் காக்கா முட்டை (எ) பாபு, பிரதீப்குமாரின் தந்தை சுகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதீப்குமார் அப்பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்ததை அறிந்த தாம்பரம் போலீசார் நேற்று முன்தினம் காலை பிரதீப்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி நதியாவை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதை அறிந்த பிரதீப்குமார் தனது நண்பர் சுரேஷுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அற்புதம் நகர், கலங்கல் தெருவில் வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதே பகுதியில் பதுங்கி இருந்த கடப்பேரி பஜனைக்கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (26), அற்புதம் நகரை சேர்ந்த ஜெயபாபு என்ற காக்காமுட்டை பாபு (32), பூபால் (43), அன்பழகன் (36) ஆகிய 4 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போலீசாருக்கு ‘டோஸ்’

பட்டப்பகலில் தாம்பரம் பகுதியில் இரட்டை கொலை நடைபெற்று சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சம்பவ இடத்திற்கு தாம்பரம் போலீசார் செல்லவில்லை. இதனால் தெருவில் ரத்தவெள்ளத்தில் கிடந்த உடல்களை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். அதன் பின்னர் தான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ரத்தவெள்ளத்தில் இருந்த உடல்களை துணிகள் கொண்டு மறைத்து ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு செல்லாததே படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவுவதற்கு காரணம் என  போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரிய வந்துவுடன் தாம்பரம் போலீசாரை அழைத்து ‘செம டோஸ்’ விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: