×

வேலூர் மக்களவை தேர்தல் நடத்தை விதியை மீறி வேளாண் கூட்டுறவு வங்கியில் பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 கடன்: அதிமுக நிர்வாகிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

பள்ளிகொண்டா: வேலூர் மக்களவை தேர்தல் நடத்தை விதியை மீறி பள்ளிகொண்டா அடுத்த ரஜாபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயனாளிகளுக்கு தலா ₹25 ஆயிரம் கடன் வழங்கியதாக அதிமுக நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட ரஜாபுரத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள் மாடுகள் வாங்குவதற்காக அங்குள்ள தொடக்க வோளண்மை கூட்டுறவு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு அதிமுக நிர்வாகிகள் தலைவராகவும், துணை தலைவராகவும், செயலாளர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடன் கேட்டு விண்ணப்பித்தவர்கள் பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், கடன் தொகை ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு முன்னதாகவே வெளியே வட்டிக்கு கடன் வாங்கி மாடுகளை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

விண்ணப்பித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் கடன் வழங்காததால், ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் 12ம் தேதி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர். இதற்கிடையில் ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் மீண்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது. அதன்படி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நலத்திட்டங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான மானியக்கடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விண்ணப்பித்தவர்களுக்கான கடன் வழங்குவதற்கும் தடை உள்ளது.ஆனால், தேர்தல் நடத்தை விதியை மீறி அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ரஜாபுரத்தில் மாடுகள் வாங்குவதற்காக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தவர்களில் 31 பேருக்கு நேற்று மதியம் தலா ₹25 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மட்டுமே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முக்கிய பொறுப்புகளில் இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகளை மீறி கடன் வழங்கப்பட்டதாக பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : Rs.25,000 each , beneficiaries , Agricultural Cooperative Bank , Vellore Lok Sabha, election code
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...