கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம் 94 குழந்தைகளின் பெற்றோர் கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 15ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் குழந்தைகளை இழந்த பெற்றோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கிய ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004 ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தன. 18 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்த 15ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கருப்பூரில் உள்ள சின்னம்மாள் கல்லறை மற்றும் கும்பகோணத்தில் உள்ள பெருமாண்டி இடுகாட்டில் உள்ள சமாதியில் இறந்த குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை வைத்து பெற்றோர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் தீவிபத்து நிகழ்ந்த கிருஷ்ணா பள்ளி முன் ஒன்று கூடி 94 குழந்தைகளின் உருவப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் போர்டுக்கு மாலை அணிவித்தனர்.

அப்போது அவர்கள் தங்கள் குழந்தைகளின் படங்களை பார்த்து கதறி அழுதனர். பலர் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவிடத்துக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். மாலையில் பள்ளி வளாகத்தில் இருந்து பெற்றோர், அகல் தீபம் ஏற்றி ஊர்வலமாக சென்று மகாமக குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றினர். இந்தநாளில் அனைத்து பள்ளிகளிலும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தவும், கும்பகோணத்தில் ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கவும் 15 ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். அடுத்தாண்டாவது எங்களது கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர்.

Related Stories: