கிருஷ்ணகிரி அருகே ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களை கோயிலில் தங்க வைத்த பெற்றோர்: பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்

வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் குப்பச்சிபாறை கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 173 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக திருலோச்சனா பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 5 ஆசிரியர்கள் உள்ள நிலையில், ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் விடுமுறையில் உள்ளார். மற்றொருவர் இறந்து விட்டார். இன்னொருவரும் அடிக்க விடுமுறை எடுப்பதால் 173 மாணவ, மாணவிகளுக்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தி வருகின்றனர். இதனால் சிரமம் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, குழந்தைளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து நேற்று ெபற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் தங்க வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து, வேப்பனஹள்ளி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பெலிசிட்டா மேரி, வந்து  பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆசிரியர்கள் அடிக்கடி நீண்ட விடுமுறையில் சென்று விடுவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்றனர். இதைத்தொடர்ந்து  உதவி தொடக்க கல்வி அலுவலர் பெலிசிட்டா மேரி ஆசிரியர்கள் பணி இடமாறுதலுக்கான கவுன்சலிங் சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டிருப்பதால் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிப்பதாகவும், தீர்ப்பு வெளிவந்தவுடன் அனைத்து ஆசிரியர்களையும் உடனடியாக நியமிப்பதாகவும் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: