தூய்மையான கரங்களுடன் நாடுவோருக்கு விரைவாக நீதி காலதாமதமான மனுக்களை நீதிமன்றம் ஊக்குவிக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து

மதுரை: தூய்மையான கரங்களுடன் நீதிமன்றத்தை நாடுவோருக்கு விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், காலதாமதமாக செய்யும் மனுக்களை நீதிமன்றங்கள் ஊக்குவிக்க கூடாது என்று ஐகோர்ட் கிளை நீதிபதி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம், மகாராஜபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். பதவி உயர்வுக்காக கடந்த 1992-93ம் ஆண்டின் பணி மூப்பு அடிப்படையில் சார்பதிவாளர் நிலை 2ல் எனக்கு பதவி உயர்வும், அதற்குரிய பணப்பலன்களை நிர்ணயம் செய்து வழங்கவும் பதிவுத்துறை ஐஜிக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:காலம் கடந்து மனு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடுப்பவர்கள் அதற்கான காரணம் உருவான காலத்தில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் நீதிமன்றத்தை நாட வேண்டும். காலதாமதமான மனுக்களை நீதிமன்றங்கள் ஊக்குவிக்கக்கூடாது. தற்போது பலர் குறுக்கு வழியில் பலன் பெறும் வகையில், காரண காரியங்களை தாமாகவே உருவாக்கி நீதிமன்றத்திற்கு வருகின்றனர். நிலுவையிலுள்ள இதுபோன்ற மனுக்களை அடையாளம் கண்டு, அவற்றை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நீதித்துறையின் பொன்னான நேரத்தை உண்மையில் நீதி தேவைப்படும் மக்களுக்காக செலவிட வேண்டும். நீதியின் கோயிலாக விளங்கும் ஐகோர்ட்டை தங்களது சட்ட உரிமையை நிலை நாட்டுவதற்கு தூய்மையான கரங்களுடன் நாடுவோருக்கு விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் ரிட் மனு தாக்கல் செய்பவர்கள், தங்களது கோரிக்கை தொடர்பாக 6 மாதத்தில் மேல்முறையீடு அல்லது மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்புகை சீட்டு பெற வேண்டும். அந்த மேல்முறையீடு அல்லது மனு மீது 6 மாதத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி முடிவெடுக்க வேண்டும். அதன் பிறகே ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: