தேசிய புலனாய்வுத்துறையால் கைதானவர்கள், உறவினர்களின் வீடுகளில் கண்காணிப்பு: ராமநாதபுரம் எஸ்.பி தகவல்

ராமநாதபுரம்: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கு காரண மானவர்களை தேசிய புலனாய்வு துறையினர் இந்தியா, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் தேடி வந்தனர். இது தொடர்பாக கைதானவர்களின் வாட்ஸ் அப் குரூப்பில், தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் பெயர்கள், செல்போன் எண்கள் இருந்துள்ளது. இதன் அடிப்படையில் புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் சிலரது வீடுகளில் நடத்திய சோதனையில் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவைகளை தேசிய புலனாய்வு துறையினர் கைப்பற்றினர்.சில தினங்களுக்கு முன் பயங்கரவாத அமைப்பினர், சிலரை டெல்லியில் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். அவர்களில் கீழக்கரையை சேர்ந்த ரபீக் அகமது, முன்தாப்சிர், முகைதீன் சீனி சாகுல்ஹமீது, பைசல்செரிப், வாலிநோக்கத்தை சேர்ந்த பரூக் ஆகிய 5 பேர் உள்ளனர். கைதான 5 பேரின் வீடுகள், உறவினர்களின் வீடுகள், நண்பர்கள் என அனைவரையும் கண்காணித்து வருவதாக எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.

இது குறித்து எஸ்பி கூறுகையில், ‘‘தேசிய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 4 பேர்,  வாலிநோக்கத்தை சேர்ந்த ஒருவர் என 5 பேர் உள்ளனர். இந்த 5 பேரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பண உதவிகள் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 5 பேரின் வீடுகள், அவர்களது உறவினர்கள், நண்பர்களை கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.கோவையில் பிடிபட்ட 2 பேர் விடுவிப்பு: கோவையில் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பரப்புவதாகவும், இரு பிரிவினரிடையே மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சதி திட்டம் தீட்டுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு நுண்ணறிவு போலீசார் நேற்று முன்தினம் உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த ஆட்டோ பைசல் (எ) பைசல் ரகுமான்(32), கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த சதாம் உசேன் (27) ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையின் போது இருவருடைய வீடுகளிலும் 2 செல்போன், 2 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.இதைதொடர்ந்து 2 பேரையும் அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளிக்கு அழைத்து சென்ற போலீசார் அவர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். பின்னர் 2 பேரும் விடுவிக்கப்பட்டனர். சம்மன் அனுப்பும்போது அவர்களை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: