சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை திருப்போரூரில் மீட்பு: வடமாநில ஆசாமி கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தையை திருப்போரூரில் போலீசார் மீட்டனர். குழந்தையை கடத்திய வடமாநில ஆசாமியை கைது செய்தனர்.  சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலம் நவுரங்க்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராம் சிங் (25) என்பவர் தனது மனைவி நீலாவதி (23) மற்றும் மகன் சோம்நாத்துடன் (3) ஒடிசா செல்வதற்காக எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வந்தார். அதிகாலை நேரம்  என்பதால் குடும்பத்தினருடன் ராம் சிங் ரயில் நிலையத்திலேயே தூங்கியுள்ளார். நள்ளிரவில் நீலாவதி எழுந்து பார்த்தபோது சோம்நாத்தை காணவில்லை. ரயில் நிலையம் முழுவதும் தேடியும் சிறுவனை காணவில்லை. இதுகுறித்து சென்டிரல் ரயில்வே போலீசாரிடம் ராம் சிங் புகார் செய்தார்.தமிழக ரயில்வே ஐ.ஜி. வனிதா உத்தரவுப்படி், சென்டிரல் ரயில்வே சூப்பிரண்டு முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் சோம்நாத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Advertising
Advertising

இந்தநிலையில், கடத்தப்பட்ட குழந்தை திருப்போரூரில் பேருந்தில் இருப்பதாக போலீசாருக்குதகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு பரங்கிமலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பெற்றோரிடம் உரிய விசாரணை நடத்தி குழந்தையை  பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய ஆசாமியை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பெயர் ஓபிரெட்டி, ஒடிசாவை சேர்ந்தவர் எனவும், அவர்தான் குழந்தையை கடத்தியது ம் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து ரயில்வே டி.எஸ்.பி முருகன் கூறுகையில் ‘‘சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி கடத்தல் ஆசாமியை கண்டுபிடித்து கைது செய்துள்ளோம். இனி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவிக்கப்படும். அதை வைத்து குழந்தைகளை அடையாளம் காணலாம் என்றார்.

Related Stories: