விபத்து ஏற்படுத்தியதாக மாணவனை அடித்து உதைத்து ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல்: 10 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் யோகேஷ் (20). எம்ஐடியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அடையாறு பாலத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நண்பருடன் பைக்கில் சென்றபோது, எதிரே பட்டினப்பாக்கத்தை சேர்ந்த கண்ணன் (43) என்பவர் எதிர்பாராத விதமாக எனது பைக் மீது விழுந்துவிட்டார். அதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, காயமடைந்த கண்ணனின் நண்பர்கள் 10 பேர் அங்கு வந்து, சிகிச்சைக்கு ₹1 லட்சம் கேட்டு மிரட்டினர்.

மேலும், என்னை சரமாரி அடித்து உதைத்து நான் வைத்திருந்த  ₹600, பைக் சாவி, ஏடிஎம் கார்டு மற்றும் பையை பிடுங்கி சென்று விட்டனர். எனவே அவர்களிடம் இருந்து என்னுடைய பொருட்களை மீட்டுதர வேண்டும், பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து இருந்தார். அதன்படி மயிலாப்பூர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பணம் பறிக்கும்  நோக்குடன் கல்லூரி மாணவனை தாக்கிய கண்ணன் உட்பட 10 பேர் கொண்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Student,beaten , allegedly ,causing ,accident
× RELATED ராமநாதபுரம் அருகே தன்னிச்சையாக...