நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கான வட்டிச் சலுகை 4%ல் இருந்து 6% ஆக உயர்வு : பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் தமிழக மக்களின் பல்வேறு பிரச்சினைகள், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இதற்கிடையே, சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

கைத்தறித் துறை

தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊதிய உயர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-னின் கீழ் நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வை முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள சுமார் 2 லட்சம் கைத்தறி நெசவாளர்கள், ஆண்டு ஒன்றுக்கு 14 கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள். அத்துடன் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தில் நெசவு செய்பவர்களுக்கு கூலி உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி நெசவு தொழிலாளர்களுக்கான கூலி ஒரு சேலைக்கு 43 ரூபாய் ஆகவும், வேட்டிக்கு 24 ரூபாய் ஆகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு :

வேளாண்மைத் துறை

*பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு, முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும்.  

*கூட்டுறவு சங்கம் கூட்டு வட்டி மானியம் 4 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

 

*நடப்பாண்டில் 100 விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடியதுணை வேளாண்மை விரிவாக்க மையங்களை கட்டுவதற்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு  செய்யப்படும்.

*சென்னை வண்ணாரப்பேட்டையில், வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நகரப்புற மக்களைக் கவரும் வகையில் தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா’’ அமைக்கப்படும்.

*குறித்த நேரத்தில் கரும்பு விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள ரூ. 6 கோடியில் கூடுதலாக 10 வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

    

* விவசாயிகளின் நலனுக்காக, நடப்பாண்டில் மேலும் 150 மதிப்புக்கூட்டும் மையங்களை உருவாக்குவதற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*இந்த ஆண்டு, 243 கிராம அளவிலான பண்ணை இயந்திர வாடகை மையங்கள் 19 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    

*தென்னை அதிகம் சாகுபடி செய்யும் மாவட்டமான கன்னியாகுமரியில் தென்னை மதிப்புக் கூட்டும் மையம் ஒன்று 16 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

*நடப்பாண்டில், 12 கோடி ரூபாய் செலவில், 20 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

*மதுரை, சேலம், ஈரோடு, தூத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களில், பண்ணை அளவில் விளைபொருட்களை பாதுகாக்க சூரிய சக்தியால் இயங்கும் சிறிய அளவிலான குளிர்பதன அலகுகளை நிறுவிட தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், 100 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.  

இந்து சமய அறநிலையத் துறை

* இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் இல்லாத, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டு திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதியுதவி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும்.

தின்பண்டங்கள் மீதும் விழிப்புணர்வு படங்கள் இடம்பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் : முதல்வர் பழனிசாமி

சிகரெட் பாக்கெட்டுகளில் இருப்பது போன்று உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்கள் மீதும் விழிப்புணர்வு படம் போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்கள் மீதும் விழிப்புணர்வு படங்கள் இடம்பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பூங்கோதை கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Related Stories: