மண்ணச்சநல்லூர் பகுதியில் கடும் தண்ணீர் பஞ்சம்... 35 ஏக்கர் எலுமிச்சை மரங்கள் கருகும் அவலம்

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் 35 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள எலுமிச்சை மரங்கள் கருகி வரும் அவலநிலையை கண்டு விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் சனமங்கலம், எதுமலை, பெரகம்பி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 35 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் எலுமிச்சை விவசாயிகளின் முக்கிய பணப்பயிராக கருதப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் எலுமிச்சை விவசாயத்தை நம்பி உள்ளனர். எலுமிச்சை ஒரு நீண்ட கால பயிராகும். பயிரிட்ட நாளில் இருந்து சுமார் 5 ஆண்டுகள் கடந்த பிறகே விளைச்சலை எடுக்க முடியும். அந்த 5 ஆண்டுகளும் முதலில் விவசாயிகள் எலுமிச்சை பயிருக்கு செலவு செய்ய வேண்டும். அந்த வகையில் இப்பகுதி விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு வருடத்திற்கு செலவு செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் செலவு என்றால் 5 வருடங்களுக்கு இரண்டரை லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு இரண்டரை லட்சம் வரை செலவு செய்த பிறகுதான் வருமானத்தை பார்க்க முடியும். அந்த வகையில் இப்பகுதி விவசாயிகள் பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். ஆனால் விளைச்சல் வரும் சமயத்தில் தண்ணீர் இல்லாமல் எலுமிச்சை மரங்கள் காய்ந்து வருகின்றன. பருவ மழை பொய்த்தால் விவசாய நிலங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும், அதில் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர். சில விவசாயிகள் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி எலுமிச்சை மரங்களுக்கு பாசனம் செய்து வருகின்றனர். ஆனால் அந்த வகையில் பாசனம் செய்வதற்கு அதிக பணம் செலவாவதால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். ஏறக்குறைய ஏராளமான எலுமிச்சை மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விட்டன. இருக்கும் மரங்களை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சனமங்கலத்தை சேர்ந்த எலுமிச்சை விவசாயி சரவணன் என்பவர் கூறியதாவது: எலுமிச்சை விவசாயம் எங்கள் பகுதி விவசாயிகளுக்கு முக்கிய பயிர். இதன் மூலம் விவசாய கூலிகள், சிறு விவசாயிகள், சிறு வியபாரிகள் என்று பலதரப்பட்டவர்கள் பலன் அடைந்து வருகின்றனர். கிராமப்புற பொருளாதாரத்திற்கு எலுமிச்சை பயிர் ஒரு முக்கிய பயிராக கருதப்படுகிறது. எலுமிச்சை நீண்ட கால பயிராக இருந்தாலும் 5 ஆண்டுகள் வரை அதை காப்பாற்றிவிட்டால் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு அது பலன் தரும். அந்த வகையில் எங்கள் பகுதியில் 5 ஆண்டுகள் போராடி காப்பாற்றிய எலுமிச்சை மரங்கள் தற்போது அறவே தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர். மீதி இருக்கும் எலுமிச்சை மரங்களையாவது காப்பாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும். பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய உதவித்தொகை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: