ஆபத்தை உணராத மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் பாம்பன் பாலத்தில் ‘பகீர்’ செல்பி

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் செல்பி எடுக்கும் வழக்கம் தொடர்கிறது. விபரீதம் ஏற்படும் முன் ரயில்வே அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில்வே பாலத்தில் ரயில்வே அதிகாரிகள், பராமரிப்பு பணியாளர்கள் தவிர, பாலத்தில் நடந்து செல்வதற்கும், கப்பல் செல்லும்போது திறக்கப்படும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்திலுள்ள கேபினுக்கும் செல்ல அனுமதியில்லை. இதுகுறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலாப்பயணிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என பலரும் ரயில் பாலத்தில் ஆபத்தான முறையில் நடந்து செல்வதும், செல்பி எடுப்பதும் வழக்கமாகி விட்டது.

பெண்கள், குழந்தைகள் என குடும்பமாக பாலத்தில் நடந்து செல்லும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள், இருபக்கமும் பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் இல்லாத பாலத்தின் நடுவில் தண்டவாளத்திற்கு இடையில் நின்று கேமராவில் படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ச்சியடைகின்றனர். கடலில் வீசும் காற்று திடீரென்று சுழன்று வேகமாக வீசினால் தடுமாறி கடலில் தவறி விழுந்து உயிர் பலி ஏற்படவும் வாய்ப்பும் உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புத்தகப்பையுடன் பிக்னிக் வருவது போல் பாம்பனுக்கு வருவதும், கடற்கரையில் சுற்றித்திரிந்து விட்டு ரயில் பாலத்தில் நடை போட்டு செல்பி எடுத்து பொழுதை கழிப்பதும் வாடிக்கையாகி விட்டது. பணியாளர்களும் இதனைக் கண்டுகொள்வதில்லை. பாம்பன் கடலில் அவ்வப்போது பலத்த காற்று வீசிவரும் நிலையில் ரயில்கள் இயக்குவதிலும் அவ்வப்போது தடை ஏற்படுகிறது.

இந்நிலையில் சுற்றுலாப்பயணிகளும், மாணவர்களும் ஆபத்தை உணராமல் பாம்பன் பாலத்தில் நடந்து செல்வதும் சர்வசாதாரணமாக நடக்கிறது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் தரப்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டும் பயனில்லை. நேற்று காலை பாம்பன் ரயில் பாலத்தில் சில பள்ளி மாணவர்கள் நடந்து சென்றனர். சீருடை அணிந்து புத்தகப்பை சகிதமாக சென்ற தனியார் பள்ளி மாணவர்கள் பாலத்தில் செல்பி எடுத்தனர். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே அதிரடி உத்தரவுகள் போடும் அதிகாரிகள், சுற்றுலாப்பயணிகள் உயிர் பாதுகாப்பு கருதி ரயில் பாலத்தில் நடந்து செல்வதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியறுத்தியுள்ளனர்.

Related Stories: