திருவண்ணாமலையில் பிறந்து சில நிமிடங்களே ஆன நிலையில் கலெக்டர் அலுவலக கழிவறையில் பெண் குழந்தை வீச்சு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறையில் பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் காலை 6 மணியளவில் புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்திற்கு எதிரே கழிவறைக்கு சென்றார். அப்போது, அங்கு குழந்தை அழுகுரல் கேட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் ஓடிச்சென்று தன்னுடன் பணிபுரியும் நபர்களிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்த போது, துணியில் சுற்றிய நிலையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை சுத்தப்படுத்தப்படாமல், ரத்தத்துடன் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை பெண் ேபாலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். பின்னர், இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து, அலுவலக ஊழியரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். பிறந்து சில நிமிடங்களே ஆன நிலையில் பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்ற கொடூர தாய் யார்? பெண் குழந்தை என்பதால் வீசி சென்றாரா? அல்லது தகாத உறவினால் பிறந்த குழந்தையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: