×

சின்னசேலம் வட்டார பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கல்

சின்னசேலம்: சின்னசேலம் வட்டார அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதை தடுக்க உயர் அதிகாரிகள் கண்காணிக்க கலெக்டர் தனிக்குழு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 25க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளது. இந்த பள்ளிகளில் சுமார் 8000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு புரத சத்து கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக அரசு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தை அரசு மாணவர்களின் நலன்கருதி கொண்டு வந்தது. இந்த முட்டை வழங்கும் திட்டத்தை அரசு நல்ல எண்ணத்துடன் கொண்டு வந்தாலும் சில அதிகாரிகளின் அலட்சியத்தாலும் பண ஆசையாலும், முட்டை டெண்டர் எடுத்தவர்கள் சில நேரங்களில் அழுகிய முட்டைகளை வினியோகம் செய்து வருகின்றனர். அந்த முட்டைகளையும் தரமானதா என்று பார்க்காமல் அமைப்பாளர்கள் சில நேரங்களில் மாணவர்களுக்கு வழங்குகின்றனர். இதைப்போல சின்னசேலம் பகுதியில் உள்ள தெங்கியாநத்தம் கிராமத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் அழுகிய முட்டை வழங்கியதை தலைமை ஆசிரியர் தடுத்து நிறுத்திய சம்பவமும் நடந்துள்ளது. அதைப்போல நேற்றும் கூட சின்னசேலம் அருகே வீ.அலம்பலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அவித்த முட்டை அழுகியதாக இருந்ததை பார்த்த தலைமை ஆசிரியை தடுத்து நிறுத்தி உள்ளார்.

தகவல் அறிந்த சத்துணவு மேலாளர் கணேசனும் சம்பவ இடத்திற்கு சென்று முட்டைகளை அப்புறப்படுத்தி உள்ளார். இந்த அழுகிய முட்டைகளை மாணவர்கள் சாப்பிட்டால் புட்பாய்சன் ஆகி வாந்தி பேதி ஏற்பட்டிருக்கும். இதுபோன்று இன்னும் தெரியாமல் சில பள்ளிகளிலும் நடந்திருக்கலாம். ஆனால் யாருக்கும் தெரியவில்லை. ஆகையால் இனிவரும் காலங்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்குவதை தரமானதா என கண்காணிக்க தாசில்தார், பிடிஓ, கிராம விஏஓ ஆகியோர் கொண்ட குழு அமைத்து கண்காணிக்கவும், மதிய நேரங்களில் பள்ளிகளில் ஆய்வு செய்யவும் கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Egg, Government School
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...