கஞ்சா வியாபார போட்டியால் கொலை களமாக மாறிய கீழக்கரை

கீழக்கரை: பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் கஞ்சா விற்பனையால் வருங்கால சந்ததியினர் சீரழியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கஞ்சா தொழில் போட்டியால் தொடர் கொலைகள் நடைபெற்று வருவது கீழக்கரை மக்களை பதட்டம் அடைய வைத்துள்ளது. கஞ்சாவை வெளியூரிலிருந்து கொண்டு வந்து கீழக்கரையில் விற்பனை செய்கிறார்கள். உள்ளூரிலும் சில ஏஜென்ட்டுகள் இதற்கென செயல்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் சட்டவிரோத போதை பொருட்கள் விற்பனையும், ஊடுருவலையும் தடுக்க முடியவில்லை.

Advertising
Advertising

கீழக்கரையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து நடக்கும் கஞ்சா வியாபாரம் வெகுவாக பரவி வருகிறது. வேகமாக பரவி வரும் போதை பொருள் கலாச்சாரத்தால் பெற்றோர்கள் பெரும் மன உளைச்சல்களுக்கு ஆளாகிறார்கள். பள்ளி, கல்லூரி வாசல்களிலும், சில வீடு மற்றும் பெட்டிக் கடைகளிலும், தோட்டங்களிலும் கஞ்சா விற்பனை ஜோராக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு சில மாணவர்கள் கஞ்சா வியாபாரியுடன் ஏற்பட்டுள்ள நட்பால் சக மாணவர்களை சீரழித்து வருகின்றனர். மாணவர்கள் போதை பொருட்களின் விளைவுகளை தெரியாமல் அதை வாங்குகின்றனர். விற்பனை பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் சிறுவர்களை ஆசை வார்த்தை காட்டி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட வைக்கின்றனர். பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் வியாபாரத்தை கனகச்சிதமாக செய்து வருகின்றனர். இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபடும் சிறுவர்களை எந்த நேரமும் போதையிலேயே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சாவால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. மாணவ சந்ததியினர் இப்படி போதைக்கு வாழ்வை சீரழித்து வருவது பெரும் வேதனையை உண்டாக்கியுள்ளது. தொடர்ச்சியாக சில ஆண்டுகளாக கீழக்கரை நகரில் கிலோ கணக்கில் கஞ்சா போலீசாரால் கைபற்றப்பட்டு பல்வேறு நபர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் 4 கிலோ கஞ்சாவை ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு கடத்தி வந்த முகம்மது யூசுப் சுலைமான்(43) மற்றும் நாகராஜ்(22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். உச்சகட்டமாக கஞ்சா விற்பனை போட்டியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்த இளைஞர் கச்சிமரைக்காவை எதிர் கும்பல் கொலை செய்து கடற்கரையில் புதைத்தது மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மாவட்டத்திலேயே கீழக்கரை மிகுந்த அமைதியான நகரமாகும். இப்பகுதி மக்கள் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இப்பகுதியில் பெரும் குற்றச்செயல்கள் நடைபெறுவது வெகு குறைவாகும். கடந்த 5 மாதங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 4 நாட்களுக்கு முன் இரவில் வீடு புகுந்து நாகராஜ் என்பவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். சமீப காலமாக ரவுடிகள் கும்பல் கும்பலாக உருவாகி வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழிலாக கஞ்சா வியாபாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சிலர் வீடுகளில் புகுந்து திருடவும் செய்கின்றனர். சில திருட்டுகளில் பெண்கள் பயந்து போலீசில் புகார் அளிப்பதில்லை. வெளியூரை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களும் ரவுடி கும்பலில் இணைந்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக கொலைகளும், குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதை தடுக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்து கீழக்கரையில் சட்டவிரோத கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் கடும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு மீண்டும் உயிர்பலிகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

Related Stories: