பாலக்கோடு அருகே தண்ணீரின்றி வறண்ட பஞ்சப்பள்ளி அணை

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பஞ்சப்பள்ளி அணை வறண்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணை உள்ளது. இந்த அணையானது மொத்தம் 52 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம், சுமார் 2,700 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது. மேலும், தர்மபுரி நகராட்சி, பாப்பாரப்பட்டி மற்றும் பாலக்கோடு பேரூராட்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், நீர் ஆதாரமாகவும் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை திகழ்கிறது. இந்நிலையில், கடந்த 3ஆண்டுகளாக தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனது. இதனால், மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு, ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் வறண்டு கிடக்கின்றன. இதேபோல், பஞ்சப்பள்ளி அணையின் நீர்மட்டம் முழுவதும் சரிந்து, தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.

மேலும், பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் சரிந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, தூள் செட்டி ஏரி, சின்னாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி, பாலக்கோடு மற்றும் தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, வறட்சி பிடியில் இருந்து, தர்மபுரி மாவட்டத்தை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: