×

சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டுத் தாருங்கள்... 3 குழந்தைகளோடு இளம்பெண் கலெக்டரிடம் கண்ணீர்

நெல்லை: சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி 3 குழந்தைகளோடு தென்காசியை சேர்ந்த ஒரு இளம் பெண் கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார். தென்காசி அரைக்காரை தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பேச்சியம்மாள். இவர் தனது 3 குழந்தைகளோடு நேற்று கலெக்டரிடம் அளித்த மனு: எனக்கு 5, 4, 2 வயதுகளில் 3 குழந்தைகள் உள்ளனர்.

எனது கணவரை மேலப்பாவூரை சேர்ந்த ஒருவர் சவுதியில் தோட்ட வேலைக்கு ரூ.35 ஆயிரம் சம்பளம் எனக்கூறி அழைத்து சென்றார். திருவண்ணாமலையில் உள்ள ஏஜென்டுக்கு ரூ.85 ஆயிரம் வட்டிக்கு வாங்கி பணம் கட்டிச் சென்றார். ஆனால் அங்கு தினமும் ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்து, தோட்டத்தில் ஆடு மேய்க்கும் வேலை அளித்துள்ளனர். ஆனால் 2 மாதம் கடந்தும் சம்பளம் அளிக்கவில்லை. எனது வீட்டின் நிலையை எனது கணவர் தெரிவித்த பின்னர் ரூ.18 ஆயிரம் மட்டுமே சம்பளம் தர முடியும் என கொடுத்துள்ளனர். உடல்நிலை மோசமடைந்த எனது கணவர் சம்பளம் இல்லாமல் இருக்க முடியாது. எனது பாஸ்போர்ட்டை தந்துவிடுங்கள், இந்தியாவிற்கே செல்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.

எனது கணவரின் பாஸ்போர்ட் அங்குள்ள ஏஜென்ட் ஒருவரிடம் உள்ளது. அவர் பாஸ்போர்ட் இல்லாமல் அங்கு அடிமையாக நடத்தப்பட்டு வருகிறார். எனக்கு சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில், நான் 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு துயரத்திற்கு ஆளாகியுள்ளேன். எனவே எனது கணவரை பத்திரமாக மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags : Saudi Arabia, work
× RELATED பொதுப்பணி, நீர்வளத்துறையில் 36...