பேரூராட்சிகளில் மழைநீர் தொட்டிகள் அமைக்க வலியுறுத்தல்

உத்தமபாளையம்: தேனி மாவட்ட டவுன்பஞ்சாயத்துக்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்திட அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியை தொடங்க உள்ளனர். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், ஆண்டிபட்டி, காமயகவுண்டன்பட்டி, அனுமந்தன்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட 22 டவுன்பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் உள்ள குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள் என பல்வேறு இடங்களிலும் கட்டாயமாக மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் டவுன்பஞ்சாயத்து அதிகாரிகள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு பணியை தொடங்க உள்ளனர். தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு செல்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இனி வருங்காலங்களில் இயற்கையாக பெய்யக்கூடிய மழையை சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் பயன்பாடு இல்லாமல் கிடந்தால் அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக முன் மாதிரியாக திகழக்கூடிய அரசு அரசுஅலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளதால் பயன்பாடே இல்லாமல் கிடக்கும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் பற்றிய கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதனைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையங்கள் பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. இதனை சரிசெய்திட சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் கேட்டுகொள்ளப்பட உள்ளனர். இதேபோல் அரசு அலுவலங்களில் இதற்கான முன்மாதிரி தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன’’ என்றனர்.

Related Stories: