மீன்கரை ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மீன்கரைரோட்டோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பிற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். பொள்ளாச்சி நகரில் மத்திய பஸ்நிலையம், நியூஸ்கீம்ரோடு, மார்க்கெட்ரோடு, பாலக்காடுரோடு, உடுமலை ரோடு தேர்நிலை பகுதி உள்ளிட்ட பல இடங்கள் போக்குவரத்து மிகுந்த முக்கிய இடமாக உள்ளது. இப்பகுதிகளில் ரோட்டோரம் நின்று செல்லும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு அதிகம் ஏற்படுகிறது. இதில் வணிகவளாகம் மிகுந்த பகுதியும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நியூஸ்கீம்ரோடு, ராஜாமில்ரோடு, மார்க்கெட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேரத்தில் ஆங்காங்கே நிற்கும் கனரக வாகனங்களால் பிற வாகன ஓட்டிகளும், மக்களும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து விதிமுறை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைக்கின்றனர்.

இருப்பினும், விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, வாகன போக்குவரத்து மிகுந்த மார்க்கெட்ரோட்டை கடந்து மீன்கரைரோடு பகுதியில், சரக்கு ரயிலில் பொருட்களை ஏற்றி செல்வதற்காக ஆங்காங்கே கனரக வாகனங்களை நிறுத்துவதால், அந்த வழியாக செல்லும் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. சிலநேரத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ரோட்டோரத்தை கடந்தும், வழி மறித்தவாறு வரிசைகட்டி நிறுத்துவதால் பிற வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு மீன்கரைரோட்டோரம், வரிசையாக நிறுத்தப்பட்ட லாரியில், மொபட்டில் வந்தவர்கள் அடிபட்டு இருவர் படுகாயமடைந்தனர். இப்படி, மீன்கரைரோடு, ராஜாமில்ரோடு, மார்க்கெட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரம் இடையூறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்களை வரைமுறைப்படுத்துவதுடன், மீண்டும் விபத்து நேரிடாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: