விவசாயியாக வாழும் “106 வயதை தொட்ட கொள்ளுத்தாத்தா”

அறந்தாங்கி அருகே 106வது பிறந்த நாளை விவசாயியான கொள்ளுத்தாத்தா மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் கொண்டாடினார். அறந்தாங்கியை அடுத்த பெருமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி செல்லம்மாள். இந்த தம்பதியருக்கு காளிமுத்து, ரத்தினம், நாராயணசாமி, கோவிந்தசாமி என்ற 4 மகன்களும், பத்மாவதி, சிவயோகம், பிரேமாவதி ஆகிய 3 மகள்கள் உள்ளிட்ட 7 பேர் உள்ளனர். இவர்களில் காளிமுத்து, பத்மாவதி ஆகியோர் இறந்துவிட்டனர். கருப்பையாவின் மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரக் குழந்தைகள் என சுமார் 78க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களில் ரெத்தினம் தவிர மற்றவர்கள் வெளியூரில் வேலை பார்த்ததால், அப்பகுதியிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர்.

ஆரம்பத்தில் பூர்வீக கடை இருந்ததால், கருப்பையா வீட்டாரை அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் கடைக்காரர் வீடு என்றே அழைக்கின்றனர். பின்னர் கருப்பையா விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தினார். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி செல்லம்மாள் இறந்துவிட்டார். அதன்பிறகு கருப்பையா, தனது 2வது மகன் ரெத்தினத்தின் வீட்டிலேயே உள்ளார். கடந்த 1914ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பிறந்த கருப்பையாவிற்கு நேற்று அவரது குடும்பத்தினர் 106வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதற்காக சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மகன்கள் கோவிந்தசாமி மற்றும் நாராயணசாமி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன், நேற்று பெருமருதூருக்கு வந்தனர். பின்னர் அங்கு கருப்பையா, கேக் வெட்டி தனது 106வது பிறந்தநாளை கொண்டாடினார்.

106 வயது ஆன போதிலும், கருப்பையா இயற்கை உபாதை கழிக்க நடந்தே செல்கிறார். அடுத்தவர் சொல்வதை புரிந்துகொண்டு பதில் அளிக்கிறார். 106வது பிறந்தநாளை கொண்டாடிய கருப்பையா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வானம் பார்த்த பூமியான எங்கள் பகுதியில் அப்போது அதிக அளவு மழை பெய்ததால், விவசாயம் செழித்தது. ஆனால் தற்போது மழையை பார்ப்பதே அபூர்வமாக உள்ளது. நான் ஆரம்பத்தில் இருந்தே சரியான நேரத்திற்கு தேவையான உணவை எடுத்துக் கொள்வேன். எனது மனைவி இறந்த பிறகு எனது மகன் ரெத்தினம், அவரது மனைவி ராஜாத்தி மற்றும் குடும்பத்தினர் என்னை நல்ல முறையில் கவனித்து வருகின்றனர். எனது வாரிசுகள் இணைந்து எனக்கு பிறந்தநாள் கொண்டாடுவதைவிட எனக்கு வேறு பாக்கியம் இல்லை. எனது 100வது பிறந்தநாளையும் எனது வாரிசுகள் கொண்டாடினர். இவ்வாறு அவர் கூறினார்.

106 வயதான கருப்பையா குறித்து அவரது மகன் ரெத்தினம் கூறியதாவது: எனது தந்தை குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கம் உடையவர். மேலும் ஆரம்ப காலத்தில் இயற்கை உணவை விரும்பி உண்பார். அவருக்கு பிபி மட்டுமே உள்ளது. மற்றபடி எந்த நோயும் இல்லை. அவர் வாழ்நாள் முழுதும் கதர் ஆடையையே உடுத்தி வருகிறார். 100வது பிறந்தநாளில் இருந்து தொடர்ந்து அவரது பிறந்தநாளை நாங்கள் அனைவரும் இணைந்து கொண்டாடி வருகிறோம். நாங்கள் ஆண்டிற்கு ஒருநாள் இணைந்து அவரது பிறந்தநாளை கொண்டாடுவதை எனது தந்தை அதிகம் விரும்புகிறார். இன்றும் அவர் நல்லபடியாக நடக்கிறார். நாங்கள் சொல்வதை புரிந்துகொள்கிறார். அவருக்கு இன்னும் பல பிறந்தநாட்களை நாங்கள் கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பமுமாகும். 106 வயது கொள்ளுத்தாத்தாவிற்கு அவரது வாரிசுகள் அனைவரும் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

Related Stories: