×

விடிய விடிய இடி, மின்னலுடன் சென்னையை குளிர்வித்த கனமழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை: விடிய விடிய இடி, மின்னலுடன் சென்னையில் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, வட கடலோர மாவட்டமான சென்னையில் வெப்பசலனம் காரணமாக நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று இரவு 7.45 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சென்னை அண்ணாநகர் , அமைந்தகரை , அரும்பாக்கம் முகப்பேர் உள்ளிட்ட இடங்களிலும், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பம்மல், அனகாபுத்தூர், சேலையூர், செம்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, கொடுங்கையூர், பெரம்பூர், வியாசர்பாடி,

கொளத்தூர், திரு.வி.க. நகர், அடையாறு, திருவான்மியூர் உள்பட சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அதேபோல், சென்னையின் பிறபகுதிகளான நுங்கம்பாக்கம், அண்ணாநகர், போரூர், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, ராயபுரம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மழை பெய்தது. அதன்பிறகு, தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று பெய்த மழையால் சென்னை ஓரளவுக்கு குளிர்ந்தது. வெப்பசலனம் காரணமாக சென்னையில் இன்றும் சில இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Madras, heavy rain, people are happy
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...