×

ஜாலி டூர் போனதை பேஸ்புக்ல போட்டா ஐடி ரெய்டு வருமா?

எதற்கெடுத்தாலும் செல்பிதான். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரின் பழக்க தோஷம் ஆகிவிட்டது இது. அதிலும் புது பைக் வாங்கினால், புது கார் வாங்கினால் உடனே பேஸ்புக்கில் செல்பி எடுத்து போட்டு லைக் அள்ளுகின்றனர். டூர் போனால் அலப்பறை தாங்க முடியாது. அதிலும் பாரின் டூர் என்றால் கேட்கவே வேண்டாம்.
 தொடர்ச்சியாக செல்பி எடுத்து பேஸ்புக், இன்ட்ராகிராம், ட்விட்டர் என தங்கள் வலை தள பக்கங்களில் பதிவேற்றம் செய்து மொத்தமாக போட்டாவால் நிரப்பி விடுவார்கள். இப்படி, சமூக வலைதளங்களில் செல்பி எடுத்து போடுவதை வருமான வரித்துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்ற தகவல் சமீப காலமாக பரவி வருகிறது.
 வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு வகையாக தகவல் திரட்டி, வரி செலுத்துவோரின் செலவு விவரங்களை கணக்கிடுகிறது. இதில் ஒன்றுதான் இந்த சமூக வலைதள கண்காணிப்பு.

 எனவே, காஸ்ட்லி கார், வெளிநாடு டூர் போய் செல்பி எடுத்து வெளியிட்டு அலப்பறை செய்தால் வருமான வரி நோட்டீஸ் கதவை தட்டும், ரெய்டு கூட வரலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.  ஆனால் இது உண்மையல்ல என்கிறார், மத்திய நேரடி வரிகள் ஆணைய தலைவர் பி.சி.மோடி. மேலும் அவர் கூறியதாவது: வருமான வரித்துறைக்கு பல வழிகளில் தகவல்கள் வருகின்றன. அதை வைத்தே ஒருவர் எந்த வகையில் செலவு செய்கிறார் என்று கண்டறிய முடியும். பரிவர்த்தனை விவரங்கள் எளிதாக கிடைத்து விடும். இதுபோல் பயண விவரங்களும் வருமான வரித்துறைக்கு தானாகவே வந்து விடும்.

 இதுபோல் வங்கிகள், மியூச்சுவல் பண்ட், கிரெடிட்கார்டு, சார் பதிவாளர் அலுவலகங்கள் போன்றவற்றில் இருந்தும் வருமான வரித்துறை தகவல்களை பெறுகிறது.  இந்த அடிப்படையில், குறிப்பிட்ட வரம்புக்கு மேல் 18 வகையான பண பரிமாற்றங்களில் ஏதாவது ஒன்று செய்திருந்தால் கூட, சம்பந்தப்பட்ட நபருக்கு ‘நீங்கள் இத்தகைய பரிமாற்றம் செய்துள்ளீர்கள். வருமான வரி தாக்கலில் இதை குறிப்பிட வேண்டும். தேவைப்பட்டால் வரி செலுத்துங்கள்’ என எஸ்எம்எஸ் மூலம் அலர்ட் அனுப்பும் சேவையையும் தொடங்க இருக்கிறோம். இதையெல்லாம் தாண்டி, சமூக வலைதள பதிவுகளை கண்காணித்துதான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.


Tags : Jolly Tour, Facebook, IT Raid
× RELATED திண்டுக்கல்- பாலக்காடு இடையே தண்டவாள...