மதுரை தீண்டாமை சுவர் விவகாரம் மூன்று வார காலத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: மதுரை சந்தையூர் ராஜகாளியம்மன் கோயில் தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பான வழக்கை அடுத்த மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்காவில் உள்ள சந்தையூரில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலில் நுழையாமல் இருக்க அருந்ததி இனத்தவரால் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டது. இதில் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் இரு சமூகத்தினரிடையே நீண்ட நாள் பிரச்னையாக இருக்ககூடிய மேற்கண்ட சுவரை இடிக்கக்கோரி ஒரு பிரிவினர் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் சுமூக நிலை எட்டுவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தது.    இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சந்தான கவுடர் மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் வந்தது. இதையடுத்து வாதங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் அடுத்து மூன்று வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

× RELATED முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்ற நீதிபதி...