ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் சந்திர கிரகணத்தன்று நடை அடைக்கப்படாது: அதிகாரிகள் தகவல்

ஸ்ரீகாளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோயிலில் சந்திர கிரகணத்தன்று நடை அடைக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரசித்திப் பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் ராகு - கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்ய உகந்த தலமாக சிறந்து விளங்குகின்றது. நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சந்திர மற்றும் சூரிய கிரகண நேரங்களில் கோயில் நடை அடைக்கப்பட்டு  கிரகண தோஷ  அபிஷேக ஆராதனைகள் செய்ய செய்த பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

ஆனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில்  சூரிய, சந்திர கிரகணங்களின் தோஷம் மூலவருக்கு ஏற்படாது என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. எனவே, இன்று நள்ளிரவு ஒரு மணி முதல் 4 மணி வரை ஏற்படும் சந்திர கிரகணத்தின்போது கோயில் நடை அடைக்கப்படாது. மேலும் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீகாளத்தீஸ்வரருக்கும், ஞானபிரசூனாம்பிகை தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: