தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நாட்டில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.  மாநிலங்களவையில் அதிமுக எம்பி மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் எழுத்து மூலமாக அளித்த பதில்:  நாட்டில் 2 இடங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என 2018-2019 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஒரு தொழில் வழித்தடம், உத்தரப் பிரதேசத்தில் ஒரு தொழில் வழித்தடமும் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள தொழில் வழித்தடத்திற்கு அடையாளம் காணப்பட்டுள்ள 5 இடங்களில் சேலமும் ஒன்றாகும். சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் மற்றும் திருச்சி ஆகியவறை இந்த தொழில் வழித்தடத்துக்கு அடையாளம் காணப்பட்டுள்ள பிற இடங்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் அமையவுள்ள தொழில் வழித்தடம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் இதுவரை 6 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.  திருச்சியில் கடந்த ஜனவரி 20ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தின்போது படைக்கல தொழில் வாரியம், ராணுவ பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்துறையினர், பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் ரூ.3,100 கோடி மேல் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். பாதுகாப்பு தொழில் வழித்தடம் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ஆலோசகர் ஒருவரை அரசு நியமித்துள்ளது.  இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags : Tamil Nadu, defense industry, central government
× RELATED தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக்...