ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளில் சந்திரபாபுவின் வெளிநாட்டு பயணத்துக்கு 39 கோடி செலவு: அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளில் சந்திரபாபுவின் வெளிநாடு சுற்றுலாவுக்கு மட்டும் 39 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் குற்றம்சாட்டினார். ஆந்திர சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் கவுதம் ரெட்டி பேசுகையில், ‘‘கடந்த தெலுங்கு ேதசம் ஆட்சியின்போது, 2014ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது அமைச்சர்கள் வெளிநாட்டு செல்ல ரூ.39 கோடி செலவழித்துள்ளனர். இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை’’ என்றார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ காக்கானி கோவர்தன் ரெட்டி பேசியதாவது:

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014ம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுப்பயணமாக நவம்பர் மாதம் சிங்கப்பூர் சென்றார்.

அப்போது ஆந்திராவை சிங்கப்பூர் போன்று சுற்றுலா முனையமாக மாற்றி மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். மேலும் ஜப்பான் சென்று வந்த பிறகு மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் ஜப்பான் மொழியை கற்றுக் கொடுத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றார். ஆனால் இதுவரை எத்தனை பேருக்கு ஜப்பான் மொழி கற்றுக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வந்தது  என்றும் தெரியவில்லை. 2015ம் ஆண்டு தாவாஸ் நகருக்கு சென்று புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் 2016ம் ஆண்டு சீனாவிற்கு சென்றபோது ஷாங்காய் நகரை போன்று ஆந்திராவில் தலைநகர்,  எலக்ட்ரானிக்ஸ், சோலார்  முனையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். 2018ம் ஆண்டு மீண்டும் ஜப்பான் சென்ற சந்திரபாபு நாயுடு டோக்கியோ போன்ற தலைநகரை அமைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் அவர் சொன்னதை ஒன்று கூட செயல்படுத்தவில்லை.

சந்திரபாபு நாயுடுவும் அவரது அமைச்சர்களும் வெளிநாடு சுற்றுலா சென்று அரசு பணத்தை வீணாக்கி வந்துள்ளனர் என்றார்.  இதற்கு பதில் அளித்து எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் கோடி முதலீடுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், 39 ஆயிரத்து 450 சிறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலமாக 5 லட்சத்து 13 ஆயிரத்து 551 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். நாங்கள் வெளிநாடு சென்று 16 லட்சம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்குவதற்காக ஒப்பந்தம் செய்தோம். அந்த நிறுவனங்களை ஆந்திராவிற்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு தற்போது உள்ள அரசுக்கு உள்ளது. அந்த நிறுவனங்கள் அனைத்தும் வந்தால் 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

Related Stories: