உபியில் பள்ளி கட்டிடம் மீது உயர் அழுத்த மின்கம்பி விழுந்து 50 மாணவர் காயம்

பல்ராம்பூர்: உத்தரப் பிரதேசத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் 50 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டம் நயாநகர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் சுமார் 60 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மழை பெய்த நிலையில், பள்ளி கட்டிடம் ஈரப்பதமாக இருந்துள்ளது. வகுப்பறையில் சாக்குபை போடப்பட்டு, மாணவர்கள் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். அப்போது திடீரென உயர் அழுத்த மின் கம்பி அறுந்து, பள்ளி கட்டிடத்தின் அருகில் உள்ள மரத்தின் மீது விழுந்துள்ளது. மரம் பள்ளி கட்டிடத்தை தொட்டுக் கொண்டிருந்தது.

அதனால் வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. சிறுவர்கள் அலறி அடித்து ஓடினர். மின்சாரம் தாக்கியதில் 50 மாணவர்கள் காயமடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அபாயக் கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து மின் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. பள்ளி அருகில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை அகற்றவும் மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: