×

கிரடிட் கார்டு கட்டணம் செலுத்திய பிறகும் போன் செய்து தொல்லை கொடுத்த வங்கிக்கு 60 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெங்களூரு: கிரடிட் கார்டு பில்லுக்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பின்னரும் அதை பொருட்படுத்தாமல் பில் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து செல்போன் மூலம் தொல்லை கொடுத்து வந்த தனியார் வங்கிக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெங்களூருவில் வசிக்கும் பி.எம்.பகீரதா என்பவர் தனியார் வங்கியின் கிரடிட் கார்டை பயன்படுத்தி வந்தார். வங்கிக்கு பாக்கி இருந்த ரூ.4,500 தொகையை கடந்த 2017 ஏப்ரல் 21ம் தேதி மற்றொரு வங்கிக் கணக்கின் இன்டர்நெட் பாங்கிங் வசதி மூலம் தனியார் வங்கிக்கு செலுத்தினார். ஆனால் கிரடிட் கார்டு வழங்கிய வங்கி ஊழியர்கள்  தினமும் செல்போனில் தொடர்புக் கொண்டு பாக்கி பில் செலுத்தும்படி வலியுறுத்தி வந்தனர். அவர் பில் செட்டில்மென்ட் செய்த ஏப்ரல் மாதம் மட்டும் 20க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகள் வந்துள்ளது.

ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்ததற்கான பில் உள்ளிட்ட ஆவணங்களை ஸ்கீரின் ஷாட் எடுத்து வங்கிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் தனியார் வங்கியின் மேலாளர் செல்போனில் தொடர்புக் கொண்டு இன்று மாலைக்குள் பணம் செலுத்த வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளார். ஏப்ரல் 30ம் தேதி, மே 1ம் தேதி முதல் வாரம் வரை செல்போனில் தொடர்புக் கொண்டு பணம் கட்ட வேண்டும், இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாக மிரட்டினார். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிவரும் பகீரதாவுக்கு இந்த மிரட்டலால் வேலையில் முழுகவனம் செலுத்த முடியாத வகையில் மன உளைச்சல் ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற பகீரதா, பெங்களூருவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் தனியார் வங்கிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.ஆர்.சீனிவாஸ் மற்றும் டி.சுரேஷ் ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து மிரட்டி பணம் வசூல் செய்தாலோ அல்லது  கடன் வசூல் செய்தாலோ ஆர்பிஐ சட்ட விதிமுறைகளுக்கு எதிரானதாகும். மனுதாரர் விஷயத்தில் உச்ச நீதிமன்றம்  மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. கிரடிட் கார்டு பணம் செலுத்தியும் செலுத்தவில்லை என்று தொல்லை கொடுத்து வந்த தனியார் வங்கிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.10 ஆயிரமும் வழங்க  வேண்டும்’’ என்று தீர்ப்பளித்தனர்.

Tags : Credit card payment, harassment, 60 thousand fine, consumer court
× RELATED ஆசிரியரை கடத்தி பணம் பறிப்பு: சென்னை...