×

காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழா: சரத்குமார் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:  கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் நடைபெறும் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு, திமுக சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீரிய முயற்சியைத் துவங்கி வெற்றியடைந்துள்ள சகோதரர் சரத்குமாருக்கு எனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.  முதன் முதலாக பெருந்தலைவருக்கு சிலை அமைத்த பெருமை, திமுக பொறுப்பிலிருந்த சென்னை மாநகராட்சிக்கு உண்டு. பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தி, அந்த மாநாட்டைத்  தொடங்கி வைத்தவர்  பெருந்தலைவர் காமராஜர்.

 குமரிக் கடற்கரையில், திமுக தலைவர் கலைஞர், கர்மவீரர் காமராஜருக்கு ஏற்றமிகு மணி மண்டபத்தை எழுப்பியிருக்கிறார். சென்னை கடற்கரை சாலை, மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் ஆகியவற்றுக்கு, பெருந்தலைவரின் பெயர் சூட்டி மகிழ்ந்தது திமுக ஆட்சி. இதே விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியதும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில், “அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும்  தலைவர் கலைஞர்.   திமுக அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டதிற்கு”  சிவகாமி அம்மையாரின் பெயரை வைத்து, அத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார் கலைஞர்.

ஜூலைத் திங்கள் 15ம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என அறிவித்து, திமுக ஆட்சியில் ஆணை வெளியிடப்பட்டது. அந்தக் கல்வி நாள், எதிர்காலத்தில் மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அந்த அரசு ஆணையை, சட்டமாகவே நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மணி மண்டபம் காமராஜரின் பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை ஆகிய நற்பண்புகளையும், தமிழகத்திற்கும், இந்திய முன்னேற்றத்திற்கும் அவர் ஆற்றிய பணிகளையும், அடுக்கடுக்கான சாதனைகளையும் இளைய  தலைமுறையினருக்கு எந்நாளும் நினைவூட்டும் நேர்த்தியான அடையாளமாக விளங்கிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kamarajar Manimandapam Opening Ceremony, Sarathkumar, MK Stalin
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...